நிரந்தர சட்டம் இயற்றப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் - பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் நிரந்தர சட்டம் இயற்றப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என உறுதி அளித்தார்.

Update: 2019-04-10 08:03 GMT
விளாத்திகுளம்

தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மு.க.ஸ்டாலின்  பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வில் இருந்து சிறந்த வேட்பாளரை தூத்துக்குடி மக்கள் பெற்றிருக்கின்றனர். தூத்துக்குடி தொகுதி மக்கள் பிரச்சினைக்கு கனிமொழி தீர்வு காண்பார். தூத்துக்குடியில் கருணாநிதியே நிற்பதாக கருத வேண்டும், நான் போட்டியிடுவதாகவும் கருதலாம். 

கனிமொழி எல்லாவற்றையும் தாண்டி சமூக போராளியாக வளர்ந்திருக்கிறார். 'பார்லிமெண்ட் டைகர்' என்ற பட்டத்தை கனிமொழி பெற்றிருக்கிறார். தூத்துக்குடிக்கும் ஒரு டைகராக கிடைத்திருக்கிறார். சிறந்த நாடாளுமன்றவாதி என்ற பட்டத்தை பெற்றவர்.

தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடலாமா?. ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல பிரச்சினைகள் கொண்ட தூத்துக்குடிக்கு தோற்பதற்காக வந்தீர்களா?. டெபாசிட் இழக்கப் போகும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தி.மு.க.வின் அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.

நச்சு ஆலையாக மாறிவிட்ட ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி வழியில் மக்கள் போராடினார்கள். அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றது தமிழக அரசு. எனவே, எடப்பாடி அரசை தூக்கி எறிய வரும் 18ம் தேதி தமிழக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எடப்பாடி அரசுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் இறந்து போனது தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை இரங்கல் தெரிவித்தாரா?

தமிழகத்தில் நடந்த கொடூரம் தொடர்பாக வாய் திறக்காத மோடியை பாசிஸ்ட் என கூறுவதில் என்ன தவறு?. பா.ஜ.க. செல்வாக்குமிக்க மாநிலங்களில் தான் கலவரங்கள் அதிகமாக நடந்துள்ளன. தமிழ்நாட்டையும் கலவர பூமியாக்க பார்க்கின்றனர். இதனை தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது. நிரந்தர சட்டம் இயற்றப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.

2007 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் ஆற்றியிருக்கும் பணிகளை எடுத்துச் சொல்ல நேரம் போதாது. மரண தண்டனை விலக்கு, நீட் தேர்வு பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, இந்திய பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படும் கொடுமை, குலசேகரன்பட்டிணத்தில் 2-வது செயற்கைக்கோள் இயங்கு தளம் அமைத்தல், மகளிருக்கான இட ஒதுக்கீடு, கல்வி உரிமை மசோதா, பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, தற்கொலையைக் குற்றமாக்கக் கூடாது, சமூக நீதி  உட்பட ஏராளமான பிரச்சினைகளுக்காக வாதாடி வெற்றி பெற்றவர் கனிமொழி.

கலை - இலக்கியம் மீது ஈடுபாடு கொண்டவர். மகளிர் அணியை சிறப்பாக செயல்படுத்தியவர். மற்ற தொகுதிகளை விட தூத்துக்குடி மக்களுக்கு இந்த தேர்தலில் அதிக கடமை இருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு தண்டனை கொடுக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது" இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் செய்திகள்