எந்த மதத்துக்கும், சாதிக்கும் தி.மு.க. எதிரானது அல்ல மு.க.ஸ்டாலின் பேச்சு

சமுதாய நல்லிணக்கத்தை பேணிக்காப்பது தான் தி.மு.க.வின் தலையாய கடமை என்றும், எந்த மதத்துக்கும், சாதிக்கும் எதிரானது அல்ல என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2019-04-09 23:00 GMT
நெல்லை,

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்துக்கு ஆதரவாக நேற்று நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்கள். எப்பொழுது அவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டாரோ? அன்றில் இருந்து பா.ஜ.க. மோடியின் செல்வாக்கு பின்னோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதை தொடர்ந்து நாம் கவனித்துக்கொண்டிருக்கின்றோம்.

கொச்சைப்படுத்த முயற்சி

சில மாதங்களுக்கு முன்பு வரை மோடி சொல்லிக்கொண்டிருந்தது தனக்கு போட்டியே கிடையாது என்ற நிலையில் அவர் தன்னுடைய பயணத்தை நடத்திக்கொண்டிருந்தார். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், நம்முடைய தலைவர் கருணாநிதியின் உருவச் சிலையை திறந்து வைத்தோம். அந்த விழாவுக்கு சோனியா காந்தி வந்திருந்தார். அவர் மட்டுமல்ல, விரைவில் இளம் பிரதமராக பொறுப்பேற்கக்கூடிய ராகுல்காந்தியும் வருகை தந்திருந்தார். நான் அவர்கள் எல்லோரையும் வைத்துக்கொண்டே மேடையில் பேசுகின்ற பொழுது, வெளிப்படையாக சொன்னேன். விரைவில் இந்திய நாட்டின் பிரதமராக ராகுல்காந்திதான் வர இருக்கின்றார். அவரை நான் முன்மொழிகின்றேன் என்று அந்த வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் எடுத்துச் சொன்னேன்.

நான் அறிவிப்பேன் என்று மோடி எதிர்பார்க்கவில்லை. பா.ஜ.க.வும் எதிர்பார்க்கவில்லை. ஏன் ஒரு சிலரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் ஆத்திரம் வந்தது, கோபம் வந்தது, என் மீது எரிச்சல் வந்தது, அப்படி எரிச்சல் வந்த காரணத்தினால் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் தி.மு.க.வை கொச்சைப்படுத்துகின்ற, தி.மு.க.வின் மீது அவதூறுகளை ஏற்படுத்துகின்ற நிலையில் பா.ஜ.க.வினர் திட்டமிட்டு இன்றைக்கு ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க.வில் இருப்பவர்கள் யார்?

அதில் முக்கியமான ஒன்று, ஏதோ தி.மு.க. இந்து விரோத கட்சி என்று ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து அந்த பிரசாரத்தை இப்பொழுது நடத்த தொடங்கி இருக்கிறார்கள். எந்த குறையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. அதனால், இன்றைக்கு இந்து என்கின்ற அந்த பிரச்சினையை எடுத்து இந்துக்களுக்கு விரோதமாக தி.மு.க. இருக்கிறது என்று ஒரு அவதூரை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். நான் கேட்கின்றேன் தி.மு.க. இந்து விரோத கட்சி என்றால், தி.மு.க.வில் இருப்பவர்கள் எல்லாம் பிறகு யார்? இந்த கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா? இந்துக்கள் தானே, இந்து மதம் என்பது ஏதோ பா.ஜ.க.வுக்கு மட்டும் சொந்தமல்ல, ஏதோ தாங்கள் தான் இந்து மதத்தின் பாதுகாவலர்கள் போல ஒரு நாடகத்தை இன்றைக்கு அவர்கள் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

எந்த ஒரு மதத்திற்கும், எந்த ஒரு சாதிக்கும் எதிரானது அல்ல. தி.மு.க. சமுதாய நல்லிணக்கத்தை பேணிப்பாதுகாப்பது தான் தி.மு.க.வின் தலையாய கடமை. பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாடின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் உள்ள அந்த மாண்புகளை பாதுகாத்திட மத்திய-மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றோம்.

தேச விரோதிகளா?

இந்து மதத்திற்கு மட்டும் அல்ல, எந்த மதத்துக்கும் தி.மு.க. எதிரி அல்ல. இவர்கள் எதிர்ப்பதால் மத விரோதிகளாக நாம் நிச்சயம் ஆகி விட மாட்டோம். இவர்கள் எதிர்க்கின்ற காரணத்தினால் நாம் ஏதோ தேச விரோதிகளாக மாறி விடுவோம் என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்த விளக்கம் நம்மைப் பற்றி அவதூறாக பேசிக்கொண்டு இருக்கக் கூடியவர்களுக்கு, பதிலாக நான் எடுத்துச் சொன்னேனே தவிர வேறல்ல.

மோடி ஆட்சி அகற்றப்பட்ட சில மணி நேரம் அல்ல அடுத்த நொடி தமிழ்நாட்டில் இந்த ஆட்சி இருக்கப்போவதில்லை. அதுதான் நடக்கப்போகின்றது. காரணம் இந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு மோடி முட்டுக்கொடுத்து வைத்திருக்கின்றார். அவர் வீட்டுக்கு போய்விட்டால் தானாக இங்கு இருக்கக்கூடிய ஆட்சியும் வீட்டிற்கு போகக்கூடிய சூழ்நிலை தான்.

சசிகலா, எவ்வளவோ தவறு செய்து இருக்கின்றார். அதில் மிகப்பெரிய தவறு என்னவென்று கேட்டால் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கி உட்கார வைத்தது தான். அதனால் இன்றைக்கு முதல்-அமைச்சராகி உட்கார்ந்து இருக்கின்றீர்கள். இப்படிப்பட்ட அக்கிரமங்களுக்கு முடிவுகட்ட நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். மத்தியில் ஒரு சர்வாதிகாரி மோடி ஆட்சி, இங்கு ஒரு உதவாக்கரை முதல்-அமைச்சர். எனவே இந்த 2 ஆட்சிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பு

தலைவர் மறைந்த உடன் நான் என்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், துரைமுருகன், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, முரசொலி செல்வம் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து முதல்-அமைச்சரின் இல்லத்திற்கு போகின்றோம். போய் கடற்கரையில் உடல் அடக்கம் செய்ய முறையாக கேட்கின்றோம். தந்தைக்காக அல்ல, இந்த நாட்டின் தலைவனுக்காக, ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவனுக்காக போய் கேட்டோம். கடைசியாக கையைப் பிடித்துக்கொண்டு கேட்டேன். உரிமை இருக்கின்றது நீங்கள் இடம் கொடுக்க வேண்டும். மறுப்பது நியாயமல்ல என்று விவாதித்தோம். திட்டவட்டமாக மறுத்தார்கள் வந்து விட்டோம்.

அதன் பிறகுதான் நீதிமன்றத்திற்கு சென்றோம். தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் வந்து பார்த்துக்கொண்டும், போய்க் கொண்டும் இருக்கின்றார்கள். அழுது கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது என்று புரியாது தவித்துக்கொண்டிருக்கின்றோம். அறிவாலயத்தில் வைக்கலாமா என்று சொல்கின்றார்கள் சிலர். துடிதுடித்து போனேன். தலைவர் கருணாநிதியின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்று புழுங்கி கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வருகின்றது. தலைவர் கருணாநிதிக்கு இடம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு வருகின்றது.

நினைத்துப்பார்க்கிறேன். ஒருவேளை நீதிமன்றமும் புறக்கணித்திருந்தால். நிச்சயமாக சொல்கின்றேன், உறுதியாக சொல்கின்றேன், அங்கே இருக்கக்கூடிய தொண்டர்களோடு தலைவர் கருணாநிதி உடலை நாங்களே தூக்கிக்கொண்டுபோய் கடற்கரையில் அடக்கம் செய்து இருப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்