கீழ்ப்பாக்கத்தில் துணிகரம் ரூ.5 லட்சம் கேட்டு செல்போன் கடை ஊழியர் கடத்தல் துப்பாக்கி முனையில் 6 பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செல்போன் கடை ஊழியரை கடத்தி சென்று ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

Update: 2019-04-04 21:30 GMT
சென்னை,

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் ராகுல் சந்த் (வயது 27). இவர் கீழ்ப்பாக்கம் கார்டன் ஹார்லிக்ஸ் சாலையில் உள்ள செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் மாலையில் ராகுல் சந்த் கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்தார்.

அவருடன் அவரது நண்பர் திலீப்பும் இருந்தார். அப்போது 4 பேர் அங்கு ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். 2 மோட்டார் சைக்கிள்களிலும் 3 பேர் வந்தனர். அவர்கள் ராகுல் சந்த்திடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்றனர்.

கடத்தல்

திடீரென்று அவர்கள் ராகுல்சந்த்தை ஆட்டோவில் குண்டுகட்டாக ஏற்றினார்கள். பின்னர் அவரை கத்தி முனையில் கடத்தி சென்றனர். ராகுல் சந்தை கடத்தி சென்ற ஆட்டோ முன்னே செல்ல பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் பாதுகாப்பிற்கு செல்வது போல சென்றனர்.

ராகுல் சந்த் என்னை காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். சத்தம் போட்டால் குத்திவிடுவோம் என்று அவரது கழுத்தில் கடத்தல்காரர்கள் கத்தியை வைத்து மிரட்டினார்கள். இதனால் ராகுல் சந்த் கூச்சல் போடுவதை நிறுத்தினார்.

ராகுல் சந்த்தை கடத்தி செல்வதை பார்த்து அவரது நண்பர் திலீப் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து வயர்லெஸ் மூலம் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

கடத்தல்காரர்களை உடனடியாக கைது செய்து ராகுல் சந்த்தை பத்திரமாக மீட்கும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், இணை கமிஷனர் ஜெயகவுரி, துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ஜெகதீஷ்வரன் தலைமையில் தனிப்படை போலீசார் கடத்தி செல்லப்பட்ட ராகுல் சந்த்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.5 லட்சம் கேட்டனர்

இந்தநிலையில் கடத்தல்காரர்கள் ராகுல் சந்த் வேலை பார்த்த செல்போன் கடையின் உரிமையாளர் குணாலுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். ராகுல் சந்த்தை பத்திரமாக விடவேண்டும் என்றால் உடனடியாக 5 லட்சம் பணத்துடன் நாங்கள் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும் என்றும், இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் ராகுல் சந்த்தை துண்டு துண்டாக வெட்டி ரோட்டில் வீசுவோம் என்று கடத்தல்காரர்கள் மிரட்டினார்கள்.

ராகுல் சந்த் தனது பைக்குள் செல்போன் வைத்திருந்தார். அந்த செல்போனை கடத்தல்காரர்கள் கவனிக்க தவறிவிட்டனர். அந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் கடத்தல்காரர்கள் செல்லும் இடத்தை கண்டறிந்து பின்தொடர்ந்தனர்.

கடத்தல்காரர்கள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஆட்டோவில் சுற்றி வந்தனர். அவர்கள் ஆட்டோவில் சுற்றுவதை கண்டுபிடித்து தனிப்படை போலீசார் பின்னால் விரட்டி சென்றனர்.

மீட்பு-6 பேர் கைது

இரவு 10.30 மணி வரை கடத்தல்காரர்களை போலீசார் சினிமா பாணியில் விரட்டினார்கள். இறுதியில் அண்ணாசாலை பெரியார் சிலை அருகில் வைத்து கடத்தல்காரர்கள் சென்ற ஆட்டோ மீது உதவி கமிஷனர் ஜெகதீஷ்வரன் தான் சென்ற காரை வேகமாக மோதினார்.

இதில் நிலைகுலைந்து போய் கடத்தல்காரர்கள் சென்ற ஆட்டோ நின்றது. உடனே தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்கள் 4 பேரை மடக்கிப்பிடித்தனர். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் பிடிபட்டனர். இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கடத்தல்காரர் மட்டும் தப்பிசென்றுவிட்டார்.

ராகுல்சந்த் பத்திரமாக மீட்கப்பட்டார். கடத்தல் சம்பவம் நடந்த சுமார் 4 மணி நேரத்திற்குள் தனிப்படை போலீசார் கடத்தல்காரர்களை கைது செய்து, கடத்தப்பட்ட ராகுல் சந்த்தையும் பத்திரமாக மீட்டனர்.

பெயர் விவரம்

பிடிபட்ட கடத்தல்காரர்கள் 6 பேரும் தீவிர விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- 1.சரத்குமார் (27), சென்னை, கொண்டிதோப்பு, 2.மகேஷ் (24) சென்னை ஏழுகிணறு, 3.ராஜேஷ் (24), 4.தமிழரசன் (24), 5.சூர்யா (21), 6.விமல் (21) இவர்கள் 4 பேரும் சென்னை யானைகவுனி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

தப்பியோடிய கடத்தல்காரர் ஜோசப்பை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்