“வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று தென்சென்னையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சென்னை,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று தென்சென்னையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
முதலாளி கூட்டணி
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்த்தனை ஆதரித்து, தாம்பரம் அடுத்த மேடவாக்கத்தில் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்து பேசியதாவது:-
டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் கடந்த 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து இந்த தொகுதிக்கு பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். மக்கள் சார்ந்த கூட்டணி நம்முடைய கூட்டணி. ஆனால் தி.மு.க.வில் முதலாளிகள் அடங்கிய கூட்டணி, முதலாளிகளின் வாரிசுகளுக்கு தான் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு பாட்டாளிகளுக்கு தான் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல முரண்பாடுகள் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்
தகுதி நீக்கம்
பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தோல்வி பயத்தால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனிநபர் விமர்சனத்தில் ஈடுபட்ட ஆரம்பித்து விட்டார். ஏதோ வன்னியர்கள் சொத்தை நாங்கள் அபகரித்துவிட்டதாக ஸ்டாலின் மிகப்பெரிய பொய்யை பேசி இருக்கிறார். இதனை நிரூபித்தால் நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்கிறோம். உங்களால் நிரூபிக்க முடியாவிட்டால் தி.மு.க. தலைவர் பதவியில் இருந்து விலக தயாரா? என்பதற்கு அவர் பதில் கூற வேண்டும்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் நீட் ரத்து செய்யும் அறிவிப்பை வலியுறுத்துவோம். பணப்பட்டுவாடா செய்ய பல கோடி ரூபாயை பதுக்கிய வேலூர் தி.மு.க. வேட்பாளரை தேர்தலில் போட்டியிடாதவாறு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.