வாரிசு அரசியலுக்கு மத்தியில் ‘மக்களுடன் குடும்ப அரசியல் நடத்த விரும்புகிறேன்’ தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு
வாரிசு அரசியலுக்கு மத்தியில் மக்களாகிய உங்களுடன் குடும்ப அரசியல் நடத்த விரும்பு கிறேன் என தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் கூறினார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில், வடசென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.ஜி.மவுரியாவை ஆதரித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று காசிமேடு, திருவொற்றியூர், ஆர்.கே.நகர், வியாசர்பாடி உள்பட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
காசிமேடு பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்த கமல்ஹாசனுக்கு மேள- தாளம் முழங்க கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
இந்த பகுதி எனக்கு புதிது அல்ல. என் இளமைப்பருவ கால நண்பர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். துறைமுகம் அருகில் இருப்பதாலோ என்னவோ இந்த பகுதி சுகாதாரமற்று காணப்படுகிறது. மற்ற இடங்கள் இதைவிட அழகாக இருந்தாலும், சென்னையின் உயிர் காசிமேடு பகுதி தான். இது உழைப்பாளர்கள் வாழும் பகுதி. அதனை பாதுகாக்க நான் வந்துள்ளேன்.
குடும்ப அரசியல்
தேர்தல் நேரத்தில் இங்கு வந்து உங்கள் கால்களை கட்டிப்பிடிப்பவர்கள், தேர்தலுக்கு பின்னர் இந்த பகுதிக்கு வருவது இல்லை. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நேர்மையாக பணியாற்றிய எங்கள் கட்சி வேட்பாளர் ஏ.ஜி.மவுரியா உழைத்து களைத்த நேரத்தில் உங்களுக்காக மீண்டும் உழைக்க வந்துள்ளார். இவர் எப்போதும் உங்களை சந்தித்து உங்கள் குறைகளை போக்குவார்.
எல்லோரும் வாரிசுகளை வைத்து குடும்ப அரசியல் செய்கிறார்கள். எங்களை பொறுத்தவரையில் குடும்பம் என்றால் நீங்கள் தான் (மக்களை காட்டுகிறார்). மக்களாகிய உங்களுடன் குடும்ப அரசியல் நடத்தவே விரும்புகிறேன். இந்த குடும்ப அரசியலை நடத்த மற்றவர்கள் மறந்து விட்டனர். உங்களின் ஏழ்மையை காரணம் காட்டி கையில் பணத்தை திணிப்பார்கள். அவர்கள் உங்கள் பணத்தில் நிறைய எடுத்துக் கொண்டு, சில்லரையை உங்களுக்கு கொடுக்கிறார்கள். ஒரு நல்ல அரசை தேர்ந்தெடுத்தால், அவர்கள் கொடுப்பதைவிட பன்மடங்கு பயன்கள் உங்களுக்கு வந்து சேரும்.
மாற்றத்தை கொண்டு வருவார்
எங்கள் வேட்பாளர் ஏ.ஜி. மவுரியா, அமைச்சர்கள் நிழலில் இருக்கும் போது, வெயிலில் காய்ந்தவர். அவருக்கு அரசின் செயல்முறைகள் தெரியும். எனவே நிச்சயம் அவர் இந்த பகுதியில் மாற்றத்தை கொண்டு வருவார். இதற்கு முன் தேர்தல் பிரசாரத்துக்கு வந்து இருப்பவர்களை பார்த்து இருப்பீர்கள். அவர்கள் வேட்பாளரை பேச விடமாட்டார்கள். நான் வேட்பாளரை பேச வைக்கிறேன். நாங்கள் தொண்டர்களை உருவாக்கவில்லை. தலைவர்களை உருவாக்குகிறோம். இந்த பகுதியில் இருந்தும் ஒரு தலைவர் உருவாக வேண்டும். இது உங்கள் கட்சி, உங்கள் ஆட்சி. உங்கள் வேட்பாளருக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தில் வாக்களிப்பீர்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏ.ஜி.மவுரியா பேசும்போது, “காசிமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது, எங்கும் கழிவுநீர் ஓடுவது என்று சுகாதாரமற்ற சூழ்நிலையே காணப்படுகிறது. என்னால் முடிந்ததை செய்து இந்த வடசென்னையின் முகத்தை மாற்றிக் காட்டுவேன். எல்லா பகுதிகளைவிட சிறந்த பகுதியாக வடசென்னையை மாற்றுவேன்” என்றார்.