சென்னையில் குடிநீர் பிரச்சினை: லாரி தண்ணீரை நம்பியே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்

கோடை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

Update: 2019-03-24 00:00 GMT
சென்னை, 

கோடை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் லாரி தண்ணீரை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

குடிநீர் தேவை

சென்னை மாநகருக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை போதுமான அளவு பெய்யாததால் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அத்துடன் ஆந்திர-தமிழ்நாடு அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியும் கிருஷ்ணா நதி நீரும் போதிய அளவு ஆந்திர மாநிலத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தற்போதைய நிலவரப்படி பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு விடும் நிலையை நோக்கி செல்கின்றன.

புழல் மற்றும் சோழவரம் ஏரிகளில் கிடைக்கும் தண்ணீர் மூலம் ஓரளவு நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இவற்றுடன் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், வீராணம் ஏரி மற்றும் போரூர் அடுத்துள்ள கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 2 மாதங்களுக்கு சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் என்பது கேள்விக்குறியாகும் நிலையில் தான் இருந்து வருகிறது.

கூடுதலாக தண்ணீர் தொட்டிகள்

தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் வீடுகள் மற்றும் தெருக்குழாய்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதுடன், பொதுவான இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கும் லாரிகளில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, நிரப்பப்பட்டு வருகிறது. போதிய தண்ணீர் கிடைக்காததால் மாநகரில் குடங்களுடன் பொதுமக்கள் சுற்றித்திரிவதை காணமுடிகிறது.

இதில் ஒரு சில இடங்களில் தண்ணீர் முறையாக கொண்டு சென்று நிரப்புவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்படும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநகரப் பகுதிகளில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

லாரி தண்ணீர் தேவையா?

சென்னை மாநகர் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள், தெருக்குழாய்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளுக்கு தினமும் 450 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் 10 ஆயிரத்து 649 குடிநீர் தொட்டிகள் (சின்டெக்ஸ் பிளாஸ்டிக் தொட்டிகள்) தீவிரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த தொட்டிகளுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்பட்டு வருகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்போது கூடுதலான இடங்களில் புதிய தண்ணீர் தொட்டிகள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சராசரியாக இந்த தண்ணீர் தொட்டிகள் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையாகும். லாரி தண்ணீர் தேவைப்படுபவர்கள் சென்னை மெட்ரோ வாட்டர் இணையதளத்தில் முன்பதிவு செய்தால் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுக்குமாடி வீடுகள்

வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால் குடிநீரின் தேவையும் அதிகரித்து உள்ளது. ஆனால் போதுமான தண்ணீர் ஏரிகளில் இல்லாததால் வினியோகம் குறைந்து உள்ளது.

குறிப்பாக மாநகரில் உள்ள அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு முறையாக தண்ணீர் வராததால், லாரிகள் மூலம் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மாத பட்ஜெட்டில் லாரி தண்ணீருக்காக தனியாக பணம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது.

அதிலும் குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு சில பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. தொற்று நோய்கள் பரவிவிடும் என்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்