நடிகர் கமல்ஹாசன் டி.ஜி.பி.யுடன் சந்திப்பு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நடிகர் கமல்ஹாசன் நேற்று டி.ஜி.பி.யை சந்தித்து பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுத்தார்.

Update: 2019-03-12 21:52 GMT
சென்னை,

பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.

அங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை சந்தித்து, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். சந்திப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொள்ளாச்சி சம்பவங்கள் குறித்து தொடரும் செய்திகளும், பரவும் செய்திகளும் எங்களுக்கு பதற்றத்தை அளிக்கிறது. எங்களைவிட பொள்ளாச்சி பகுதி மக்களுக்கு பதற்றம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. அதை எங்கள் தரப்பில் இருந்து எடுத்து சொல்வதற்காக வந்திருக்கிறோம்.

பெயர்களை பெரிதாக்காதீர்கள்

அரசியல் ஆதாயத்துக்காக இதை ஊதி பெரிதுபடுத்திவிடாதீர்கள் என்பது போலீசாரின் வேண்டுகோளாக இருக்கிறது. போலீஸ் செய்ய வேண்டியதை கண்டிப்பாக செய்யும் என்பதை டி.ஜி.பி. உறுதியளித்து இருக்கிறார். சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். அதற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் சொன்னார்.

போலீசாரின் நடவடிக்கையில் மாறுபட்ட கருத்து இருக்கிறது என்ற நிலையை அவரிடம் தெரிவித்தோம். அதற்கு ஆவன செய்வோம் என்றும் உறுதியளித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள், பெயர்களை பெரிதாக்காதீர்கள் என்பது என்னுடைய முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது.

நமது கடமை

சமூக வலைதளங்களில் பேசுபவர்கள் அனைவரும் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் ஆக்ரோஷத்தோடு பேசுவதை சட்டம் செயல்படுத்த முடியாது. சட்டத்துக்குள் என்ன செய்ய வேண்டுமோ? அதை சட்டம் சரியாக செய்யும்.

பொள்ளாச்சி போலீஸ் அதிகாரி பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வெளியிட்டது மன்னிக்க முடியாது. நான் யாருக்கும் ஆதரவாக பேச இங்கு வரவில்லை. சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்