இந்து முன்னணி ஆதரவு யாருக்கு? முக்கிய கோரிக்கைகள் வெளியீடு
இந்து முன்னணி ஜனநாயக வழியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு சில கோரிக்கைளை முன் வைத்துள்ளது.
சென்னை,
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்து முன்னணி ஜனநாயக வழியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு சில கோரிக்கைளை முன் வைத்துள்ளது. அவற்றை ஏற்று தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரும் அரசியல் கட்சியை இந்து முன்னணி ஆதரிக்கும்.
அந்த கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-
* புராதன கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இறைவன் திருமேனிகள், அரிய கட்டிட கலைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றை வழிபாட்டுடன் கூடிய பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.
* பசுஞ்சாண உரம், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
* நாட்டுப் பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
* தேசவிரோத கருத்தை பரப்பும் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவேண்டும்.
* மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும்.
* அய்யப்பன் கோவிலில் வழிபாட்டில் நெடுங்காலமாக இருந்து வரும் ஐதீகத்தை காத்திட ஆவன செய்யவேண்டும்.
* இந்துக்களின் ஆன்மிக யாத்திரைக்கு சலுகை வழங்க வேண்டும்.
* பள்ளிகளில் தாய்மொழியும், தேசிய மொழியான இந்தி மொழியும் கற்பிக்க தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
* சிறுபான்மையினருக்கு அளிக்கப்படுவது போல ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.