திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாதது ஏன்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாதது ஏன்? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

Update: 2019-03-10 23:30 GMT
சென்னை, 

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாதது ஏன்? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

பேட்டி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நிலக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.

திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தமட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.கே.போசை(இவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறந்து போனார்) எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் என்பவரும், ஓட்டப்பிடாரம் தொகுதியை பொறுத்தமட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தர்ராஜனை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமியும், அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தமட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்பாலாஜியை(இவர், தற்போது தி.மு.க.வில் உள்ளார்) எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த ஏ.பி.கீதா என்பவரும் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த 3 தொகுதிகளுக்கு மட்டும் தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது. மற்ற 18 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணைப்படியே இடைத்தேர்தலும், ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை.

நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தலுக்கு தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன. பதட்டமான தொகுதிகள் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.

துணை வாக்காளர் பட்டியல்

அதுபோன்ற தொகுதிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். வேட்புமனு தாக்கல் முடிவு பெறும் நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்னதாக துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தலுக்கு முன்னதாக புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

200 துணை ராணுவப்படை கம்பெனிகள் பாதுகாப்புக்காக கோரி உள்ளோம். முதற்கட்டமாக 10 துணை ராணுவப்படை கம்பெனிகள் விரைவில் வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கள்ளழகர் திருவிழா

‘தமிழகத்தில் தேர்தல் நடக்க உள்ள ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மதுரையில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கூடும் கள்ளழகர் திருவிழா நடக்க உள்ளது.

அந்த சமயத்தில் தமிழகத்தில் தேர்தல் நடத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்யப்படுமா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘இதுகுறித்து பரிசீலனை செய்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்’ என்று சத்யபிரதசாகு பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்