கனிமொழி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொளத்தூர் பள்ளிக்கு ரூ.1 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
கனிமொழி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொளத்தூர் பள்ளிக்கு ரூ.1 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ள நிலையில், அதற்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை,
தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று, தனது கொளத்தூர் தொகுதி வார்டு எண் 69 பந்தர் கார்டன் சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கனிமொழி எம்.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி, 53 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்து, அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையின் கோரிக்கையினை ஏற்று அவரது மேற்படிப்புக்கு உதவியாக மடிக்கணினியை வழங்கினார்.
பின்னர், வார்டு எண் 68 தீட்டி தோட்டம் 1-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி, மாணவ மாணவிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.
அதன்பின்னர், வார்டு எண் 64 பாடசாலை ரோடு சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் உள்ள நூலகத்திற்கு 1000 புத்தகம், 935 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். அதேபோல், வார்டு எண் 66-ல் பெரியார் நகர் நூலகத்தினர் அளித்த கோரிக்கையினை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் முதல் தளம் கட்டும் பணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மடிக்கணினி, தையல் எந்திரம், திருமண உதவி, சலவை பெட்டி, மீன்பாடி வண்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சக்கர தள்ளு வண்டி, 3 சக்கர மோட்டார் பொருந்திய வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.