நிமிடத்துக்கு 50 முறை மட்டுமே இதயத்துடிப்பு பச்சிளம் ஆண் குழந்தைக்கு ‘பேஸ்-மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது

நிமிடத்துக்கு 50 முறை மட்டுமே இதயம் துடிக்கும் பச்சிளம் ஆண் குழந்தைக்கு, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரியில் ‘பேஸ்-மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது.

Update: 2019-01-19 21:30 GMT
சென்னை,

தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் குப்புசாமி (30), விவசாயி. இவரது மனைவி கஸ்தூரி (27). கஸ்தூரிக்கு கடந்த மாதம் 25-ந் தேதி தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் இதயதுடிப்பு சாதாரண குழந்தையை போல இல்லாமல் (நிமிடத்துக்கு 120 முறை), நிமிடத்துக்கு 50 முறை மட்டுமே துடிப்பது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு நல ஆஸ்பத்திரியில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு இதய துடிப்பை சீராக்கும் ‘பேஸ்-மேக்கர்’ கருவியை பொருத்த முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 12-ந் தேதி, குழந்தைகள் இதய அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் ஜி.கே.ஜெய்கரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு 75 கிராம் எடையுள்ள ‘பேஸ்-மேக்கர்’ கருவியை குழந்தைக்கு பொருத்தினர். தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக டாக் டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர் கூறியதாவது:-
ஒரு குழந்தையின் இதயதுடிப்பு சீராக இல்லையெனில் மூளை வளர்ச்சி குறைந்து மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. 50 ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படும். மருந்துகள் கொடுத்தும் முடியாத பட்சத்தில்தான், ‘பேஸ்-மேக்கர்’ கருவி பொருத்தப்படுகிறது.

அந்த சூழ்நிலையில் தான் இந்த குழந்தையும் இருந்தது. தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.5 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தையின் இதய துடிப்பு தற்போது சீராக இருக்கிறது. சில நாட்களில் அந்த குழந்தையை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்