கொடைக்கானல் மலைப்பாதையில் 1,000 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது உயிரை காப்பாற்ற குதித்தவர் மரக்கிளையில் சிக்கி பலி

கொடைக்கானல் மலைப்பாதையில் சாலை தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 1,000 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது. உயிரை காப்பாற்ற குதித்தவர் மரக்கிளையில் சிக்கி உயிரிழந்தார்.

Update: 2018-12-31 21:20 GMT
பழனி,

கேரள மாநிலம் திருச்சூர் அமலாஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 19). இவர், திருச்சூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடன் அதே ஓட்டலில் ஜூபின் (20), சச்சின் (19), அப்துல் (21), ஆண்டனி (20), அனீஸ் (22), டிஷ்ணு (21) ஆகியோரும் வேலை பார்த்து வருகிறார்கள்.

புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலுக்கு ஒரு காரில் அவர்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சூரில் இருந்து புறப்பட்டனர். காரை ஜூபின் ஓட்டினார். அதிகாலையில் பழனிக்கு வந்த அவர்கள், பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தாறுமாறாக ஓடிய கார், மலைப்பாதையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 1,000 அடி பள்ளத்தில் பாய்ந்தது. கார் திடீரென பள்ளத்தில் பாய்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த விஷ்ணு உயிரை காப்பாற்றிக்கொள்ள காரின் கதவை திறந்து கொண்டு குதித்தார். அவர் குதித்த போது ஒரு சிறிய மரத்தில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் அந்த மரக்கிளையில் சிக்கி அந்தரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கி கொண்டிருந்தது நெஞ்சை உறைய வைத்தது.

இதற்கிடையே பள்ளத்தில் பாய்ந்ததில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் சிக்கிய 6 பேரும் படுகாயமடைந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சல் போட்டனர். ஆனால் அபாயகரமான பள்ளம் என்பதால் அவர்கள் கூச்சல் போட்டது யாருக்கும் கேட்கவில்லை.

இதற்கிடையே காருக்குள் சிக்கியவர்களில் 2 பேர் போராடி வெளியே வந்தனர். பின்னர் 3-வது கொண்டை ஊசி வளைவுக்கு வந்த அவர்கள், அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி விபத்து நடந்தது குறித்து உதவி கேட்டனர். அவர்கள் பழனி தீயணைப்பு நிலையம் மற்றும் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையே பழனி தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து கயிறு மூலம் கீழே இறங்கிய அவர்கள், காருக்குள் சிக்கி தவித்துக்கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலும் மரத்தில் பிணமாக தொங்கிய விஷ்ணுவின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த 6 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்