போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதான மும்பை பெண் பரபரப்பு வாக்குமூலம் ‘7 சிறுவர்களை லண்டனுக்கு அனுப்பினேன்’

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட மும்பை பெண் கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில், 7 சிறுவர்களை லண்டனுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-04 22:45 GMT
சென்னை, 

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அழைத்துச் சென்று மோசடி கும்பல் ஒன்று கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டுவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் தமிழ்மாறன், சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் ஜெயசிங், ஸ்டீபன், மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை போலீஸ்காரர் கிரிதரபிரசாத் ஆகியோர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மஞ்சு தத்தா (வயது 57) என்ற பெண் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்யும்படி மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில் துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார், சர்வதேச போலீஸ் உதவியுடன் மஞ்சு தத்தாவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

சிறையில் அடைப்பு

இந்த நிலையில் மஞ்சு தத்தா லண்டனிலிருந்து மும்பை வந்து தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னையில் இருந்து மும்பை சென்ற தனிப்படை போலீசார் கடந்த 2-ந் தேதி மஞ்சு தத்தாவை கைது செய்தனர். நேற்று முன்தினம் அவர் விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு அவர் இரவு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூல விவரம் வருமாறு:-

வாக்குமூலம்

நான் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்துள்ளேன். மும்பை பாந்த்ரா பகுதியில் சொந்த வீட்டில் வசிக்கிறேன். எனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இதனால் எனது ஒரே மகனுடன் வாழ்க்கையை நடத்த முடியாமல் போராடினேன். அப்போது டெல்லி விமான நிலையத்தில் பணியாற்றிய குடியுரிமை அதிகாரிகள் சிலர் எனக்கு பழக்கமானார்கள்.

அவர்கள் ஆதரவுடன் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்தேன். டெல்லியில் வேலைபார்த்த குடியுரிமை அதிகாரிகள் சென்னைக்கு மாற்றலாகி வந்தனர். பின்னர் சென்னை விமான நிலையம் மூலமும் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பினேன். எனது மகன்கள் என்று சொல்லி போலி பாஸ்போர்ட்டில் 7 சிறுவர்களை லண்டனுக்கு அழைத்து சென்று அங்கு ஓட்டலில் வேலைக்கு சேர்த்துள்ளேன்.

போலீஸ் காவலில் எடுக்க முடிவு

ஒவ்வொரு சிறுவனிடமும் தலா ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளேன். எனக்கு கிடைத்த பணத்தை பங்குபோட்டு எனக்கு துணையாக இருந்த விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் உள்பட பலருக்கு கொடுத்துள்ளேன். இந்த தொழிலில் எனக்கு நல்ல வருமானம் வந்தது.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மஞ்சு தத்தாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்