ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு பணம் கொடுத்த புகாரில் சிக்கியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்த புகாரில் சிக்கியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-12-04 21:30 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடும் கண்டனம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த பணப் பட்டியலை வருமான வரித்துறை கைப்பற்றிய வழக்கு விசாரணையில், இந்திய தேர்தல் ஆணையத்தையும், சென்னை ஐகோர்ட்டையும் திசைதிருப்பி பெரிதும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எப்.ஐ.ஆரில் தேர்தல் ஆணையமே 21-4-2017 அன்று அளித்த புகாரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், ரம்யா, ஆர்.சின்னத்தம்பி ஆகியோர் பெயர்களும், அத்துடன் இணைக்கப்பட்ட வருமான வரித்துறையில் உள்ள முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை?. அபிராமபுரம் காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர். போட்டபோது இந்த பெயர்களை எல்லாம் நீக்கச் சொன்னது யார்?. மொட்டையாக ஒரு எப்.ஐ.ஆரை போடவிட்டு தேர்தல் ஆணையம் அமைதி காத்தது ஏன்?. குற்றம் சாட்டப்படாத பி.எம்.நரசிம்மன் என்பவர் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரியதை அ.தி.மு.க. அரசு எப்படி அனுமதித்தது?.

கிரிமினல் நடவடிக்கை

ஐகோர்ட்டின் உத்தரவுப்படி இந்த வழக்கை கண்காணித்த சென்னை மாநகர இணை போலீஸ் கமிஷனர் என்ன செய்து கொண்டிருந்தார்?. ஐகோர்ட்டே கண்காணித்த விசாரணையில் தேர்தல் ஆணையம் கோட்டை விட்டது ஏன்?. தேர்தல் ஆணையமும், ஐகோர்ட்டு உத்தரவிட்டும் தன் மீது எப்.ஐ.ஆர். போட்டுவிடாமல் சென்னை மாநகர காவல்துறையை முதல்-அமைச்சர் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?. கொடுத்த புகாரை திருத்தி மறைத்து எப்.ஐ.ஆர். போட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று அடுக்கடுக்கான கேள்விகள் அணி வகுத்து நிற்கின்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யும் பணப்பட்டியல் தொடர்பான புகாரில் செய்யப்பட்டுள்ள முறைகேடுகளுக்கு காரணமாக இருக்கும் முதல்-அமைச்சர், துணைபோன போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், சம்பந்தமே இல்லாமல் வழக்குப் போட்டவர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சி.பி.ஐ. விசாரணை

குறிப்பாக தேர்தல் ஆணைய புகாரை மறைத்து எப்.ஐ.ஆர். போட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும். இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் குறித்தும் தனியாக துறை ரீதியான விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்கு துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஜனநாயக ரீதியிலான தேர்தலின் மீதும், அதற்குப் பொறுப்பான தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களுக்கு நல்லெண்ணமும், நம்பிக்கையும் பிறக்கும் என்பதால், வருமான வரித்துறையின் அறிக்கைப்படியான புகாரின் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்