முதல்-அமைச்சரை சந்தித்து பேசும் வரை போராட்டம் தொடரும் : சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேசும் வரை போராட்டம் தொடரும் என்று சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2018-11-01 00:00 GMT
சென்னை,

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகையை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரத்து 850 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று கருப்பு உடை அணிந்து தங்களுடைய போராட்டத்தை நடத்தினார்கள். அதையடுத்து சமூக நலத்துறை செயலாளரிடம் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலக கட்டிடத்தில் சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நியாயமான மற்றும் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 35 ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அரசு எந்த கோரிக்கைகளையும் இதுவரை நிறைவேற்றி தரவில்லை. இந்தநிலையில் 29-ந்தேதி சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா எங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இதற்கிடையில் அரசு செயலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது. மகிழ்ச்சியாக சென்றோம். ‘உணவு மானிய செலவை சற்று உயர்த்தி தருகிறோம், 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள பள்ளிகளுக்கு ‘டிராவல் அலவென்சு’ தருகிறோம்’, என்று செயலாளர் சொன்னார். ‘தயவுசெய்து பென்சனை மட்டுமாவது உயர்த்தி தாருங்கள்’, என்று மன்றாடி கேட்டோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. எங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசிடம் இருந்து சிறு அசைவு கூட இல்லை.

எங்கள் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இல்லை. இதனால் ‘ஜென்டில்மேன்’ படத்தில் வருவது போல, சத்துணவு சமையலரும், உதவியாளரும் தங்கள் சேலையை நெருப்பில் இட்டு தற்கொலை செய்யும் நிலை இப்போது எங்களுக்கு வந்துவிட்டது.

எனவே வர இருக்கும் தீபாவளி பண்டிகை, எங்களுக்கு இருட்டு தீபாவளியாக ஒரு கருப்பு தீபாவளியாக மாறியிருக்கிறது. எங்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேசும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்