ரூ.30 லட்சம் கடல் மணல் பறிமுதல் 2 கிடங்குகளுக்கு சீல்வைப்பு

தினத்தந்தி செய்தி எதிரொலியாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடல் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. 2 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2018-08-31 22:15 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி கடற்கரையில் மணல் திருடப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்ததாக நேற்று முன்தினம் தினத்தந்தியில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. முத்துசாமி காட்டுப்பள்ளி கடற்கரைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இவர் வருவதை அறிந்த மணல் கொள்ளையர்கள் லாரிகளை வேறு பாதைக்கு அவசர அவசரமாக எடுத்து சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள் அங்குள்ள தனியார் இடத்தில் நூற்றுக்கணக்கான யூனிட் கடல் மணல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இது குறித்து ஆர்.டி.ஓ. முத்துசாமி கூறியதாவது:-

ஆற்று மணலுடன் கலப்படம்

மணல் கொள்ளையர்கள் கடல் மணலை திருடி ஆற்றுமணலுடன் கலந்து விற்பனை செய்கின்றனர். இதனை கொண்டு கட்டுமான பணியை மேற்கொள்ளும்போது கட்டிடம் பாதிப்படைகிறது.

காட்டுப்பள்ளி மற்றும் செங்குன்றத்தை அடுத்த கிரண்ட்லைன் ஆகிய 2 இடங்களில் சட்டவிரோதமாக கடல் மணல் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் மதிப்புள்ள 200 யூனிட்டுக்கும் அதிகமான கடல் மணலை பறிமுதல் செய்துள்ளோம்.

காட்டுப்பள்ளியில் பறிமுதல் செய்த கடல் மணல் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கிரண்ட்லைனில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் மணல் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்ட மணல் மழை காலங்களில் பேரிடர் பாதுகாப்புக்காக மணல் மூட்டைகளாக கட்டி வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்