மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 2.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Update: 2018-08-18 22:58 GMT
மேட்டூர்,

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்றுமுன்தினம் வினாடிக்கு 2 லட்சத்து 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேட்டூர் அணைக்கு நேற்று இரவு 7 மணிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்று, மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே காவிரி ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர், ஊட்டமலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பிலிகுண்டுலுவை அடுத்துள்ள ராசிமணல் திட்டில் மேய்ச்சலுக்காக சென்ற 50 மாடுகள் வெள்ளத்தில் சிக்கின. இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மாடுகளை மீட்கும் பணிகளை தொடங்கினார்கள்.

மாடுகளை மீட்கும் பணி

நேற்று முன்தினம் 17 மாடுகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அந்த பகுதியில் மேலும் இருந்த 33 மாடுகளை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் ராசி மணல் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளதால் ராசிமணல் திட்டு பகுதி முழுவதும் தண்ணீராக உள்ளது. இதனால் மாடுகளை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் வரும் பட்சத்தில் மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அபாயம் உள்ளது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

மேட்டூர் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி, கல்வடங்கம் மற்றும் காவேரிப்பட்டி, அக்ரஹாரம், மணக்காடு, மதிக்கிழான்திட்டு, தோப்புக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கரையோரம் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, நேற்று காலை காவேரிப்பட்டி, அக்ரஹாரம், மதிக்கிழான்திட்டு, மணக்காடு, தோப்புக்காடு உள்ளிட்ட இடங்களில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ளவர்களை பரிசல்கள் மூலம் மீட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார். காவிரி கரையோர விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, வெண்டைக்காய் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதையும் கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார்.

பள்ளிபாளையம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும், குமாரபாளையம் பகுதியில் காவிரி கரையோரம் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் வசித்து வந்த 668 குடும்பங்களை சேர்ந்த 2,088 பேர் அரசு சார்பில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள 16 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல குமாரபாளையத்தில் பழைய பள்ளிபாளையம் ரோடு, பழைய பாலம், நகராட்சி அருகில் கிராம சாவடி, சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் ஆகிய 5 இடங்களில் தொடர்ந்து அதிகளவு தண்ணீர் வருவதால் அந்த பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்