துப்பாக்கி சூட்டில் பலியான ஆடிட்டரின் உடலை ஒப்படைக்கக்கோரிய மனு ஐகோர்ட்டு நிராகரித்தது

துப்பாக்கி சூட்டில் இறந்து போன தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த ஆடிட்டர் சண்முகத்தின் உடலை இறுதி சடங்கிற்காக தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று அவரது தந்தை பாலையா சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்தார்.

Update: 2018-05-25 20:59 GMT
சென்னை, 

துப்பாக்கி சூட்டில் இறந்து போன தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த ஆடிட்டர் சண்முகத்தின் உடலை இறுதி சடங்கிற்காக தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று அவரது தந்தை பாலையா சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘எனது மகன் பி.காம்., படித்து எம்.பி.ஏ. முடித்துள்ளார். ஆடிட்டராக இருந்து வந்தார். பங்கு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார். போராட்டத்துக்கும் எனது மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆசிரியர் காலனியில் உள்ள எங்களது வீட்டை பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணிக்காக ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது கலவரத்தில் சிக்கி துப்பாக்கி சூட்டில் பலியாகி விட்டார்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் ஆகியோர், உடற்கூறு ஆய்வின் அறிக்கையை பார்த்த பின்னர் தான் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடலை ஒப்படைப்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக்கூறி பாலையாவின் கோரிக்கையை நிராகரித்தனர்.

மேலும், இந்த வழக்கை ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரணைக்காக பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை 30-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்