தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்போகும் இடம் மதுரையா?, தஞ்சாவூரா?

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்போகும் இடம் மதுரையா?, தஞ்சாவூரா? என்பது பற்றி எந்த நேரத்திலும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடலாம் என்று தெரிகிறது.

Update: 2018-05-25 23:30 GMT
சென்னை, 

2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் வேண்டும். அங்கு மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். மேலும், தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்பட உள்கட்ட அமைப்பு வசதிகளும் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்காக தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்தில் ஒரு இடத்தில் தொடங்குவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இவ்வளவு நாளும் கடிதப்போக்குவரத்துகள் நடந்து வந்தன. கோர்ட்டிலும் வழக்கு போடப்பட்டிருந்தன. சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அடிக்கடி டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து விரைவில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா சென்னை வந்தபோதும்கூட, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி அவரிடம் வலியுறுத்தினர். இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இறுதிநிலை வந்துவிட்டது.

மதுரையில் உள்ள தோப்பூர் அல்லது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் தற்போது முடிவு செய்திருக்கிறது. கர்நாடக தேர்தலையொட்டி, தேர்தல் முடிந்தபிறகு எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில், எந்த நேரத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும், உடனடியாக அதைத் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்