தற்போதைய நிலைமை குறித்து தூத்துக்குடி மக்கள் புகாரளிக்க உதவி எண்கள் அறிவிப்பு

தற்போதைய நிலைமை குறித்து தூத்துக்குடி மக்கள் புகாரளிக்க உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. #SterliteProtest

Update: 2018-05-25 16:02 GMT

தூத்துக்குடி,


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22–ந் தேதி நடந்த 100–வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கி சூடு, தடியடியில் இதுவரை 13 பேர் பலியானார்கள்.

மேலும் துப்பாக்கி சூடு, தடியடியில் ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கடந்த 3 நாட்களாக தூத்துக்குடியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் இயங்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடைகள் திறக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடின. பதட்டமான இடங்களில் பாதுகாப்பு உஷார் நிலையில் உள்ளது. தூத்துக்குடியில் ஆங்காங்கே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நகருக்குள் வரக்கூடிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அண்ணாநகர்   பகுதியில் கண்காணிப்பதற்காக குட்டி விமானத்தை இயக்கி போலீசார் கண்காணித்தனர். இதற்கிடையே போலீசார் இளைஞர்களை வீடு புகுந்து கைது செய்து வருகிறார்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போதைய நிலைமை குறித்து தூத்துக்குடி மக்கள் புகாரளிக்க உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. தூத்துக்குடி மக்கள் புகாரளிக்க விரும்பினால் 1077, 9486454714, 0461-2340501 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.  

மேலும் செய்திகள்