போலீசாரால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அரசுக்கு, மனித உரிமை ஆணையம் உத்தரவு
போலீசாரால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
போலீசாரால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் கே.மலர். இவர், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
என் வீட்டில் வேலை செய்து வரும் மகேந்திரன் என்பவரை தேனாம்பேட்டை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். எதற்காக அவரை அழைத்து சென்றனர்? என்பதை விசாரிக்க தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் சென்றேன். அங்கிருந்த போலீஸ்காரர் செந்தில்குமார், என்னை தரைகுறைவான, அவதூறான வார்த்தைகளால் திட்டினார்.
நான் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியில் வந்து, சாலையில் நின்றபோது, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், போலீஸ்காரர் செந்தில்குமார் ஆகியோர் விரட்டி வந்து, லத்தியால் சரமாரியாக அடித்தனர்.
என்னை கீழே தள்ளி விட்டனர். என் ஆடையை உறுவும்படி போலீஸ்காரர் செந்தில்குமாரிடம், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆவேசமாக கூறினார்.
பொதுமக்கள் முன்னிலையில், சாலையில் வைத்து என்னை கொடூரமாக தாக்கிய இன்ஸ்பெக்டர் சரவணன், போலீஸ்காரர் செந்தில்குமார் ஆகியோர் மனித உரிமையை மீறி செயல்பட்டுள்ளனர். எனவே, அவர்களை தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த புகாருக்கு இன்ஸ்பெக்டர் சரவணன், போலீஸ்காரர் செந்தில்குமார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘புகார்தாரரிடம் வேலை செய்யும் மகேந்திரன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் தான், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி அவரை விசாரணைக்கு அழைத்து வந்தோம். இதையடுத்து, புகார்தாரர் மலர் போலீஸ் நிலையம் வந்து, போலீசாரை தரைகுறைவாக திட்டினார். அவர் மீது போலீஸ்காரர் புகார் செய்தார். அந்த புகாரை பெற்றுக் கொண்டு ரசீது வழங்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த முற்பட்டபோது, அவர் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியில் ஓடினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்’ என்று கூறியிருந்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி.ஜெயசந்திரன் அரசுக்கு பரிந்துரை செய்து பிறப்பித்த உத்தரவில், ‘புகார்தாரரை போலீசார் அடித்து, கொடுமை செய்தது மனித உரிமை மீறிய செயலாகும். இதற்காக புகார்தாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதனால், ரூ.50 ஆயிரத்தை அவருக்கு தமிழக அரசு இழப்பீடாக 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இந்த தொகையை இன்ஸ்பெக்டர் சரவணன், போலீஸ்காரர் செந்தில்குமாரிடம் இருந்து அரசு வசூலித்துக்கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.