ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை திருமணம் செய்து கொள்ள மறுத்தவர் பலி துப்பாக்கி சூட்டில் இறந்தவர் பற்றி உருக்கமான தகவல்
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து வந்தவர் அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளார் என்ற உருக்கமான தகவல் கிடைத்து உள்ளது.
ஓட்டப்பிடாரம்,
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து வந்தவர் அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளார் என்ற உருக்கமான தகவல் கிடைத்து உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் குறுக்குச்சாலையை சேர்ந்த தமிழரசன் என்பவரும் ஒருவர். அவர், தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்திலும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழரசனின் மூத்த அண்ணனின் மனைவி வளர்மதி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த தமிழரசன் 1996-ல் இருந்தே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்தார். 45 வயது வரை அவர் திருமணம் செய்யாமலேயே இருந்தார். இந்த ஆலை என்று மூடப்படுகிறதோ? அன்றுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக கூறி வந்தார்.
கடந்த 22-ந் தேதி போராட்டத்துக்கு செல்லும்போது புதுச்சட்டை அணிந்து சென்றார். அப்போது போராடும் மக்களுக்காக செலவுக்கு பணம் தேவை என்று ரூ.20 ஆயிரத்தையும் கையில் எடுத்துச் சென்றார். ஆனால், அமைதி வழியில் போராடியவர்களை குருவியை போல் சுட்டுக்கொன்று விட்டனர். இதனால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அவர் வீரமரணம் அடைந்து விட்டார்.
சித்ரவதை
தமிழரசன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை வாங்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் அன்று எங்களை வற்புறுத்தினார்கள். தமிழரசன் உடலை பார்க்கச்சென்ற அவருடைய அண்ணனும், என்னுடைய இன்னொரு கொழுந்தனுமான முனியசாமியை போலீசார் பிடித்து வைத்து தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எங்களது குடும்பம் போராட்டம் நடத்தும். அதனால் என்னை நீங்கள் சுட்டுக்கொன்றாலும், குடும்பத்தினர் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு போலீசார் அவரை விடுவித்துள்ளனர்.
எந்த நோக்கத்துக்காக தமிழரசன் வீரமரணம் அடைந்துள்ளாரோ? அந்த நோக்கம் நிறைவேறும் வரை, அதாவது ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை தமிழரசன் உடலை வாங்க மாட்டோம். நாங்கள் மட்டும் அல்ல, இறந்த மற்ற போராளிகளின் உடல்களையும் அவர்களது உறவினர்கள் வாங்க மாட்டார்கள்.
இவ்வாறு வளர்மதி ஆவேசமாக கூறினார்.