காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும்

காவிரி விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2018-05-19 23:45 GMT
சென்னை,

காவிரி பிரச்சினை தொடர்பாக, போராட்ட ஒற்றுமைக்காக ‘காவிரி நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்’ என்ற தலைப்பில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருந்தார்.

கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு தொலைபேசி மூலமாகவும் கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார்.

கமல்ஹாசன் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்காது என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதேபோல தமிழக வாழ்வுரிமை கட்சியும் பங்கேற்காது என்று அறிவித்தது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கமல்ஹாசன் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு திரும்பினார்.

இந்தநிலையில் கமல்ஹாசன் அறிவித்தப்படி அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், பா.ம.க. சார்பில் இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி தங்கதமிழ்ச்செல்வன், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் வசீகரன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப்,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் மணிகண்டன், விவசாய சங்க பிரதிநிதி தெய்வசிகாமணி, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீபிரியா, கமீலா நாசர் உள்பட பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அனைத்துக் கட்சி கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரையிலும் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.

* காவிரி பிரச்சினை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும்.

* தமிழகத்தில் இருக்கும் தண்ணீரைப் பாதுகாக்க அனைத்து ஏரிகளையும், குளங்களையும் தூர் வாரவேண்டும். சிற்றணைகள், தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

* காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை பகுதியாக அறிவிக்க சட்டபூர்வமான முயற்சிகள் எடுக்கவேண்டும்.

* அனைத்து விவசாய விளை பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயத்தை மேலும் அதிகரிக்கவேண்டும்.

* விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு இணையாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கவனித்து தீர்வு காணவேண்டும்.

* விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் கண்காணிக்கவும் செயலாற்றவும் விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைக்கவேண்டும். அதற்காக வழிவகை செய்து, அதைத்தொடர்ந்து வழிநடத்த உதவியாக இருப்போம். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் கமல்ஹாசன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அளித்த பதில்களும் வருமாறு.

கேள்வி:- இந்த கூட்டத்தை 9 கட்சிகள் புறக்கணித்துள்ளதே? இந்த கூட்டத்துக்கு வர அவசியம் இல்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

கமல்ஹாசன்:- புரிதல் இல்லாமல், நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்ற விளக்கம் இல்லாமல் அப்படி சொல்லி இருக்கலாம். விளங்கி விட்டால் அப்படி சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யமும், பா.ம.க.வும் இணைந்து போட்டியிடுமா?

டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- உள்ளாட்சி தேர்தல் முதலில் நடக்கப் போவது இல்லை. இது அரசியல் மேடை கிடையாது. பொதுவான மேடை. விவசாயிகளுக்காக நடத்தப்படுகிற மேடை. இதுபோன்ற பல மேடைகளில் நாங்கள் கலந்துகொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களிலும் கலந்துகொள்வோம். எங்களுடைய நோக்கம் விவசாயிகளை உயர்த்துவது தான். அதனால் இதில் அரசியலோ, அது சார்ந்தோ கருத்துகள் எதுவும் கிடையாது.

கேள்வி:- நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் தொலைபேசியில் அழைத்ததாக சொன்னீர்கள். அவர் வராததற்கு ஏதேனும் காரணம் சொல்லி இருக்கிறாரா?

கமல்ஹாசன்:- நான் அழைத்தபோது, ‘நீங்கள் கட்சி ஆரம்பித்துவிட்டீர்கள். நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை. எப்படி வந்தேன் என்று கேட்டால் நான் என்ன சொல்வது என்று கேட்டார். இது அவருடைய எண்ணம். அவர் வந்திருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். வரவில்லை என்றால் பரவாயில்லை. இது இன்றுடன் முடிய போகிற கூட்டம் அல்ல. இனியும் தொடரும். அப்போதாவது வருவார் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி:- ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக புதிய முதல்- மந்திரியை சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட்டதா?

கமல்ஹாசன்:- அதை விடவும் முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நிறைவேற்றப்படுகிறதா? அதன்படி செயல்கள் நடக்கிறதா? என்பதை கண்காணிக்கவே, உறுதிப்படுத்தவே ஒரு குழு தேவைப்படுகிறது.

கேள்வி:- விவசாய அமைப்புகள் எதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றார்கள்?

கமல்ஹாசன்:- நேர்மையை நம்பி இருக்கலாம் என்று நம்புகிறோம்.

கேள்வி:- மு.க.ஸ்டாலின் மட்டும் புறக்கணிக்கவில்லை, அவர் கூறியதால் தான் நாங்கள் பங்கேற்கவில்லை என்று வைகோவும் கூறியிருக்கிறார். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்களா?

கமல்ஹாசன்:- இருக்கலாம். அல்லது அது ஒரு விதமான அரசியல். இது வேறு விதமானது. அவ்வளவுதான்.

கேள்வி:- காவிரி இறுதி தீர்ப்பு விவகாரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கமல்ஹாசன்:- எது நியாயமோ அதை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டே இருப்போம். அதுக்காக மத்திய- மாநில அரசுகளை விமர்சிக்கவோ, அவர்களுடன் உரையாடவோ தேவையான யுக்தியாக, பாதையாக இருக்கிறதோ அதை மக்கள் நீதி மய்யம் தேர்ந்தெடுக்கும்.

கேள்வி:- இந்த கூட்டத்தில் போட்ட தீர்மானத்தை எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள்?

கமல்ஹாசன்:- மக்களிடம் எடுத்துச் செல்வோம். தேவைப் பட்டால் எல்லாரும் சேர்ந்து எங்கே போய் போராட வேண்டுமோ, அங்கே போய் போராடுவோம். இது மக்கள் இயக்கமாக மாறிவிடும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கூறியதாவது.

இந்த கூட்டம் அடுத்து வரும் காலங்களிலும் அரசியலற்ற கூட்டமாக நடைபெறும். காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பால் எந்த நன்மையும் கிடைக்காது. தமிழகத்திற்கு இந்த தீர்ப்பின் மூலம் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. அணைகள் மாநிலத்தின் அதிகார வரம்பில் வரும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது.

வாரியம் வேறு ஆணையம் வேறு. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. தமிழக அமைச்சர்களுக்கு காவிரி விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் விவரம் தெரியவில்லை. எஜமான் (பிரதமர் நரேந்திர மோடி) என்ன சொல்கிறாரோ அதை இங்கு இருக்கும் தமிழக அரசு செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

தமிழன் என்ற முறையில் இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். நானும், என் மகனும் தமிழர்களுக்கு எதுவும் பிரச்சினை என்றால் உடனே வந்து நிற்போம். அடுத்து வர உள்ள எம்.பி. தேர்தலில் கர்நாடகாவின் ஆதரவை பெறவேண்டும் என்பதற்காக பா.ஜ.க. அரசு கபட நாடகம் ஆடுகிறது. தமிழகத்தில் இரட்டை இலையை வைத்துக்கொண்டு, இரட்டை வேடம் போடுகிறார்கள். தமிழகத்தின் உரிமை விற்கப்பட்டுவிட்டது.

வாரியம் என்று இருந்ததை ஆணையம் என்று மாற்றி வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். காவிரி விவகாரத்தில் தமிழர்களிடையே ஒற்றுமை வேண்டும். பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நீர்வளத்துறை பெற்றிருந்தால், இதுபோன்ற பிரச்சினை வந்திருக்காது. தி.மு.க. இந்த கூட்டத்துக்கு வந்திருந்தால் நாங்கள் பங்கேற்றிருக்கமாட்டோம். மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். ஆனால் எங்களை போன்ற கட்சியினருக்கு நேரடியாக அழைப்பு விடுக்காமல், தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக பங்கேற்றேன். கூட்டத்தில் எனக்கு முரண்பாடு உள்ளது. இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

மேலும் செய்திகள்