கடந்த நிதி ஆண்டில் ‘இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,259 கோடி’ வங்கி தலைவர் தகவல்
‘இந்தியன் வங்கிக்கு கடந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.1,259 கோடியாகும் என்று வங்கி தலைவர் கிஷோர் கரத் சென்னையில் கூறினார்.
சென்னை,
நடப்பாண்டு நிறைவுற்ற காலாண்டிற்கான, இந்தியன் வங்கியின் முடிவுகளுக்கும் மற்றும் நிறைவுற்ற ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்கு வங்கியின் இயக்குனர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து வங்கி தலைவர் கிஷோர் கரத், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வங்கி 2017-18-ம் ஆண்டு வளர்ச்சியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இயக்கலாபம் 25 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது. இதில் ரூ.1,258.99 கோடி நிகர லாபமாகும்.
வியாபார சிறப்பம்சங்களில் நிதி நிலை அளவு 15.80 சதவீதமாக வளர்ச்சி அடைந்ததன் மூலம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 176 கோடியாக உள்ளது. உலகளவில் கடன்கள் 23.14 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது.
வாரா கடன் வசூல் 65.98 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
முன்னுரிமை கடன்கள் ரூ.63 ஆயிரத்து 36 கோடி அளிக்கப்பட்டுள்ளது. நலிந்த பிரிவினருக்கான கடன்கள் ரூ.16 ஆயிரத்து 213 கோடியாகும். ‘பிரதான் மந்திரி முத்ரதா யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரத்து 37 கோடியே 46 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3.52 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர்.
சராசரியாக கிளைக்கு 70 வாடிக்கையாளர்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 80 வாடிக்கையாளர்கள் வீதம் சேர்க்கப்பட்டு உள்ளனர். உள்நாட்டில் 2 ஆயிரத்து 820 கிளைகள் உள்ளன. 3 ஆயிரத்து 399 தானியங்கி பணம் பட்டுவாடா மற்றும் பணம் செலுத்தும் ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. வெளிநாடுகளில் 3 கிளைகள் இயங்கி வருகின்றன.
வங்கியின் செயல்பாட்டை பாராட்டி சிறந்த செயல் திறன் விருது, சிறந்த வங்கி விருது, ஊழல் விழிப்புணர்வு தொடக்க முயற்சி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.
வங்கியின் இயக்குனர் குழுமம், கடந்த மார்ச் 31-ந்தேதியோடு நிறைவடைந்த ஆண்டுக்கான ஈவுத்தொகை சென்ற ஆண்டை போல 60 சதவீதம் அறிவித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வங்கி உயர் அதிகாரிகள் ஏ.எஸ்.ராஜீவ், எம்.கே.பட்டாச்சாரியா மற்றும் பொதுமேலாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.