‘சிட்கோ’ நிலத்தில் வீடு கட்டியதாக வழக்கு: மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. விளக்கம்

‘சிட்கோ’ நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2018-05-08 22:45 GMT
சென்னை, 

சிறுதொழில் மேம்பாட்டு கழகமான ‘சிட்கோ’ இடத்தை ஆக்கிரமித்து, தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் வீடு கட்டியிருப்பதாக பார்த்திபன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் 1995-ம் ஆண்டு முதல் 23 ஆண்டுகாலமாக குடியிருந்து வரும் கிண்டி தொழிலாளர் குடியிருப்பு வீட்டை சிட்கோ நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக பார்த்திபன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் நீதிமன்றம் வழக்கின் உண்மைத்தன்மைகளுக்கு உள்செல்லாமல் நோட்டீஸ் வழங்க மட்டுமே உத்தரவிட்டுள்ளது.

இதில் முதல் பிரதிவாதி சிட்கோ மேலாண்மை இயக்குநர் மற்றும் சிட்கோ அதிகாரிகள்தான். அந்த செய்தியினை தற்போது பத்திரிகைகளுக்கு கொடுத்து வழக்கை தொடர்ந்த பார்த்திபன் விளம்பரம் தேட முயற்சி செய்துள்ளார். இதற்கான சட்டப்பூர்வமான பதிலையும், விளக்கத்தையும் முதல் ஐந்து பிரதிவாதிகளாகிய அரசு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பார்கள் என்றபோதிலும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் நாங்கள் எங்களுடைய விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறோம்.

சிட்கோ வீடு எங்கள் குடும்பத்தினர் பெயருக்கு மாற்றப்படவில்லை. விற்பனை பத்திரம் சிட்கோவினால் வழங்கப்படும் வரை அந்நிலம் சிட்கோவிற்கு மட்டுமே சொந்தமானது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சொத்துவிவர பிரமாண பத்திரத்திலும் இதையே தெரிவித்துள்ளேன். உண்மை இப்படியிருக்க, கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போதும் இதே வீட்டு பிரச்சினையை பூதாகரமாக்கினார்கள்.

இதை தனிப்பட்ட சுயேச்சை வேட்பாளர் நண்பர் பார்த்திபன் செலவு செய்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் எதிரிகளின் பொய் பிரசாரத்தை பொதுமக்கள் புறம்தள்ளிவிட்டார்கள். வழக்கு தொடர்ந்த பார்த்திபன் பெற்ற வாக்குகள் 87 மட்டுமே. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மட்டுமே தேவைப்படும்போது இந்த ஒரே பிரச்சினையை மீண்டும், மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இதே பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இதே நண்பர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கலையரசன் வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் எங்களை போல் பத்தாண்டுகளுக்கு குடியிருப்பவர்களை முறைப்படுத்த, சிட்கோ விண்ணப்பங்களை மீண்டும் கேட்டுப்பெற்றுள்ளது. கருணாநிதியால் ரூ.9,600 என்று வழங்கப்பட்ட மலிவு விலைக்கு மாறாக புதுத்தொகை ஒன்றினை நிர்ணயிக்க அரசு பரிசீலனையில் உள்ளது.

நாங்கள் இப்போதும் இருப்பது அடிமனை சொந்தமில்லாத தொழிலாளர் குடியிருப்பில்தான். இதில் மோசடி செய்வதற்கோ, பொய் ஆவணங்களைத் தயாரிப்பதற்கோ, ஆக்கிரமிப்பு செய்வதற்கோ எந்த விதமான முகாந்திரமும் இல்லை. தொடர்ந்து அடிமனையைத் தவிர்த்து, அவரவர் குடியிருக்கின்ற குடியிருப்புகளுக்கு ஏற்றாற்போன்று மாநகராட்சி சொத்து வரி, குடிநீர்வரி முதலியவற்றை 2001-ம் ஆண்டு முதல் நாங்கள் அனைவரும் செலுத்தி வருகின்றோம்.

உண்மைகள் இவ்வாறு இருக்க தொடர்ந்து அரசியல் ஆதாயத்திற்காக இச்செய்தியை பூதாகரமாக்கி கொண்டிருக்கின்றனர். பார்த்திபன் தொடுத்திருக்கிற இவ்வழக்கு சட்டரீதியான உண்மை நிலைகளை ஊருக்கு வெளிப்படுத்திட எனக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதற்காக பார்த்திபனுக்கும், அவருக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்