வருவாய், போலீஸ் அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
மணல் கடத்தலுக்கு துணை போகும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு. லாரி டிரைவரான இவர், மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அவரது மனைவி வேதியம்மாள், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ராமதிலகம் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது.
விசாரணையின்போது, மணல் கடத்தலுக்கு துணை போகும் போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், ‘கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மணல் கடத்தலுக்கு துணை போன அரசு அதிகாரிகள் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன என்றும், அதில் ஒருவர் லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக சிக்கினார்’ என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை கோடை விடுமுறையான நேற்று சிறப்பு வழக்காக எடுத்து நீதிபதிகள் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
ஒரு சட்டம் என்றால், அதை பாரபட்சமின்றி குற்றவாளிகளுக்கு எதிராக தீவிரமாக அமல்படுத்த வேண்டும். மணல் கடத்தலில் ஈடுபடும் லாரி டிரைவர்களை மட்டும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது என்பது ஏற்க முடியாது.
அந்த மணல் கடத்தலில் ஈடுபட தூண்டும் நபர்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தலில் ஈடுபடும் அனைவர் மீதும் தயவுதாட்சண்யம் காட்டக்கூடாது.
அதாவது, மாமூல் பெற்றுக்கொண்டு, மணல் கடத்தலுக்கு துணைபோகிற, தூண்டி விடுகிற வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். அந்த அதிகாரிகளை, ‘மணல் கடத்தல் குற்றவாளி’ என்ற வரையறைக்குள் கொண்டுவரவேண்டும்.
ஆனால், வேதனையான விஷயம் என்னவென்றால், இதுநாள் வரை ஊழல் அதிகாரிகள் ஒருவர்கூட, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் தான் மணல் கடத்தல் குற்றமே நடக்கிறது என்று எங்களது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
எனவே, இதுபோன்ற மணல் கடத்தல் குற்றத்தை தடுக்க வேண்டிய அதிகாரிகள், கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து செயல்பட்டால் அல்லது மாமூலை வாங்கிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு மணல் கடத்தல் குற்றச் செயலை கண்டுகொள்ளாமல் இருந்தால், அவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையை காலதாமதம் எதுவும் இல்லாமல், உடனடியாக எடுக்க வேண்டும். எனவே, தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் சுற்றறிக்கைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.
அதில், மாமூலை வாங்கிக்கொண்டு மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ, கண்ணை மூடிக்கொண்டு கடத்தலை கண்டு கொள்ளாமல் இருந்தாலோ அல்லது இந்த கடத்தலுக்கு வேறுவிதமாக உடந்தையாக இருந்தாலோ, அவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிடவேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை, லாரி டிரைவர் பாபுவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் பிறப்பித்த உத்தரவில் குறைபாடு உள்ளது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.