ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை கொண்டு பாதுகாப்பு வழங்க சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு, 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-05-08 21:45 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் சரவணன் சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் மாவட்ட அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் வளாகத்துக்குள், வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், கோஷங்கள் போடுவதற்கும் தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முழு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.

அப்போது ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சக்திவேல் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்பு வழங்குகிறது. சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பின்னர் சில சம்பவங்கள் நடந்தன. அதில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்பின்னர், ஐகோர்ட்டு வளாகத்தில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடைபெறவில்லை. இவையெல்லாம் முற்றிலுமாக ஒழிக் கப்பட்டுவிட்டது. ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டுகளில் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.

மேலும் அந்த அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. நீதிபதிகள், வக்கீல்களுக்கு இடையே அவ்வப்போது ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பிரச்சினைகள் இருந்தால், அதை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்கப்பட்ட பின்னர், வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்று தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

எனவே, சென்னை ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்கவேண்டும். தற்போது, வளாகத்தில் தடுப்புகளை அமைத்து, இருபிரிவாக பிரித்து, ஒரு பக்கம் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பும், மறுபக்கம் (மாவட்ட கோர்ட்டுகள் உள்ள பகுதிகளுக்கு) மாநில போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படுகின்றன. ஐகோர்ட்டு முழுவதும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பின் கீழ் வந்தால், இந்த தடுப்புகளை எல்லாம் அகற்றிவிடலாம்.

எனவே, ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்கும் விதமாக ஒரு திட்டத்தை தலைமை பதிவாளர் சக்திவேல் உருவாக்கவேண்டும். அந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவுக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்