கனிஷ்க் தங்க நிறுவனத்தின் ரூ.143½ கோடி டெபாசிட்டுகளை அமலாக்கத்துறை முடக்கியது

வங்கி கடன் மோசடியில் சிக்கிய கனிஷ்க் தங்க நிறுவனத்தின் ரூ.143½ கோடி டெபாசிட்டுகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்து உள்ளது. #BankFraud #EnforcementDirectorate

Update: 2018-04-26 15:57 GMT

சென்னை,  

வங்கிகளில் கோடிகணக்கில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தொழிலதிபர் விஜய் மல்லையா, வைர நகை வியாபாரி நிரவ் மோடி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் வங்கிகளிடம் ரூ.824 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ (எஸ்.பி.ஐ.) வங்கி கூட்டமைப்பு சிபிஐயிடம் புகார் கொடுத்தது.  

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின், தங்க நகைகளை கூடுதலாக இருப்பு காட்டியும், ஆடிட்டர்களைக் கொண்டு போலியான அறிக்கை தயார் செய்து கொடுத்தும் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கிக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை நிதிநிலை அறிக்கைகள், விற்பனை ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. 14 வங்கிகளிடம் பெற்ற கடனை வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாமல் ரூ.824 கோடியே 15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.  

இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கப்படவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.
அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள நடராஜபுரம் மற்றும் புக்காத்துறை கிராமங்களில் கனிஷ்க் தங்க நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.48 கோடி மதிப்பிலான நகை தொழிற்சாலை உள்ளிட்ட சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இதனை தொடர்ந்து கனிஷ்க் தங்க நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்திய ரூ.143.58 கோடி ‘பிக்சட் டெபாசிட்’டுகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. ஆக மொத்தம் இந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.191.58 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் டெபாசிட்டுகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. 

மேலும் செய்திகள்