ஒரு சில விஷயங்களில் தினகரனுடன் மாற்று கருத்து இருப்பதை மறைக்கவில்லை: ஜெய் ஆனந்த்

ஒரு சில விஷயங்களில் தினகரனுடன் மாற்று கருத்து இருப்பதை மறைக்கவில்லை என்று ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran

Update: 2018-04-24 14:29 GMT
சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் குடும்பத்திற்கும், அவரது சகோதரர் திவாகரன் குடும்பத்துக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது அந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதாவது, “மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்” என்று கூறியிருந்தார். அதற்கு டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் கருத்து தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜெய்ஆனந்த் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், “என்னால் முடிந்த நல்லதை போஸ் மக்கள் பணியகம் சார்பில் செய்யப்போகிறேன். அரசியலில் செயல்பட போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப்போவதில்லை. என்னை சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு” என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்தும், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டனர். இந்த நிலையில், நேற்று மீண்டும் ஒரு கருத்தை ஜெய் ஆனந்த் பதிவிட்டார். அதில், “நான் அ.ம.மு.க. என்று எங்கும் குறிப்பிடவில்லை. குறிப்பிடாமலே நான் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும் என ஏன் ஒரு சில நிர்வாகிகள் நினைக்கிறார்கள்?. எப்போது பிரச்சினை வரும் என ஒரு சிலர் நம் கூட்டத்திலேயே காத்திருப்பதாக ஒரு சிலர் வாயிலாக அறிந்தேன். நம் தலைமை இதனை கண்டறியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், தனது முகநூல் பக்கத்தில் நேற்று கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், எங்கள் தியாகத்தை கொச்சைபடுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சசிகலா குடும்பத்தை சார்ந்த திவாகரனும், ஜெய் ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது” என்ற கருத்துக்களும் இடம் பெற்று இருந்தது.  வெற்றிவேலின் கருத்து அமமுக கட்சியினர் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் இன்று அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “  பொது மேடைகளில் தினகரனுக்கு எதிராக கருத்துகளை நாங்கள்(திவாகரன், ஜெய் ஆனந்த்) வெளிப்படுத்தியதில்லை. ஒரு சில விஷயங்களில் எங்களுக்கு மாற்று கருத்து இருப்பதை மறைக்கவில்லை; மறைமுகமாக பல இன்னல்கள், அவமானங்களை சந்தித்து வருகிறோம். உங்கள் தியாகத்தை நாங்கள் கொச்சைபடுத்தவில்லை; யாரோ எழுதிய அறிக்கை உங்கள் பெயரில் வெளிவந்துள்ளது, அது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்