மார்க்சிஸ்டு கட்சி 25-ந் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 25-ந் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாக கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2018-04-21 21:15 GMT
சென்னை, 

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 25-ந் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாக கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி தனது கல்லூரி மாணவிகளை பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் ஈடுபட்டதன் விளைவாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையில், தமிழக கவர்னர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது.

இப்பிரச்சினையில் கவர்னர் தானாகவே முன்வந்து பேட்டியளிப்பது மேலும் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் விசாரணைக்கு உள்ளாக வேண்டிய கவர்னரே தானாக முன்வந்து ஒரு விசாரணை குழுவை அமைப்பது உண்மைகளை மூடி மறைப்பதற்கான ஒரு நடவடிக்கையே.

எனவே, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், இப்பிரச்சினையில் கவர்னர் நியமித்துள்ள விசாரணைக் கமிஷனை ரத்து செய்ய வேண்டும் எனவும், கவர்னர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரம்பியுள்ள இப்பிரச்சினையில் ஐகோர்ட்டின் நேரடி கண்காணிப்பில், உயர்மட்ட புலன் விசாரணைக்குழு அதிகாரிகளை நியமித்து, விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் 25-ந் தேதி அன்று காலை 10 மணியளவில் கவர்னர் மாளிகை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தினை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கிவைப்பார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் கவர்னர் அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்