பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் டி.டி.வி.தினகரன்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
நாமக்கல்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை பொறுத்தவரையில் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும். இதில் தொடர்புடையவர்கள் அரசு அதிகாரிகளா? அரசியல்வாதிகளா? என்பது தெரிய வரவேண்டும். இந்த விஷயத்தில் கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் அமைச்சர்கள் ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காக மவுன விரதம் இருந்து வருகின்றனர். பொதுமக்கள் சொல்வதை சொன்னால் மானநஷ்டஈடு வழக்கு போடுவதை தவிர வேறு எதுவும் செய்வது இல்லை. தமிழக அரசை பொறுத்தவரையில் அணைய போகிற விளக்காக உள்ளது.
18 எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த ஒரு போராட்டத்தை நடத்தினாலும் காவல்துறையினர் அனுமதி தர மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே நியாயமாக நடக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
பொதுமக்களை பொறுத்தவரையில் பதுங்குவதுபோல பதுங்குவார்கள், ஆனால் பாயவேண்டிய நேரத்தில் பாய்ந்து விடுவார்கள். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் பா.ஜனதாவின் கிளை நிர்வாகம் செயல்பட்டு வருவது போல, தமிழகத்திலும் கிளை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.