ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை சந்தித்து பேசினார். #Nirmaladevi
சென்னை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் வகையில் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக அதிகாரிகளை அனுசரித்து சென்றால், மதிப்பெண் மற்றும் பணம் ஆகியவை தருவதாக அவர் பேசிய ஆடியோ வைரலானது.
இதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. எனவே பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் பன்வாரிலால், இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார். விசாரணைக்குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவிட்டதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை சந்தித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.