விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40-ம் ஆண்டு சாதனை விழா இயக்குனர்கள், நடிகர்கள் வாழ்த்து

விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர்கள், நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2018-04-15 21:45 GMT
படப்பை, 

விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர்கள், நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

கலைத்துறையில் 40 ஆண்டுகள்

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி சாதனை விழாவும், மண்டல மாநாடும் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த கரசங்காலில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை டி.முருகேசன் தலைமை தாங்கினார். குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் பா.கங்காதரபாண்டியன் வரவேற்றார்.

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு இருந்த கட்சி கொடியை பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஏற்றிவைத்தார். இதனையடுத்து ‘விஜயகாந்த்தின் செல்வாக்கிற்கு காரணம் கலைப்பணியா, அல்லது வள்ளல் தன்மையா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. கலைத்துறையில், அரசியல் துறையில் விஜயகாந்த் கடந்து வந்த பாதையை விளக்கும் குறும்படம் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது.

இயக்குனர்கள் வாழ்த்து

பின்னர் நடைபெற்ற விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேசன், திரைப்பட வினியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, விக்ரமன், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, நடிகைகள் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு விஜயகாந்தை வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விஜயகாந்த், பிரேமலதா விஜய காந்த் ஆகியோர் இறுதியாக சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் செய்திகள்