மத்திய அரசு அகராதியை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்: ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான்
‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்றும், மத்திய அரசு அகராதியை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை,
‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்றும், மத்திய அரசு அகராதியை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
எண்ணம் கிடையாது
மீன்வளத்துறை அமைச்சர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் தனித்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு என்பது சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்ட தீர்ப்பு. அந்த தீர்ப்பானது காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு.
அதை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்ற அந்த வகையில் தான் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. சட்டமன்றம் கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படி எல்லாம் நாங்கள் செய்யும்போது இதில் எங்கே தனித்து செயல்பட்டு இருக்கிறோம் என்பதை சொல்ல வேண்டும்.
வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தில் நமக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை திறந்துவிடுவதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கவில்லை என்று சொன்னால், உங்களுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று சொன்னது அ.தி.மு.க. தான்.
‘ஸ்கீம்’ என்பது என்ன?
சுப்ரீம் கோர்ட்டு மே 3-ந்தேதிக்குள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சொல்லி இருக்கிறது. ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான், காவிரி நீரை முறைப்படுத்தும் குழு தான். இந்த இரண்டையும் அமைத்து வரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக சொல்லி இருக்கிறது. மத்திய அரசு அகராதியை (டிக்ஷ்னரி) பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை தான் சுப்ரீம் கோர்ட்டு அமல்படுத்த சொல்லி இருக்கிறது. நிச்சயமாக அமல்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
நம்பிக்கை உள்ளது
தமிழ்நாட்டின் நலன் காக்கப்படும் அளவுக்கு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மெரினாவில் அறவழிப் போராட்டம் நடத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்யும். போராட்டத்தினால் சட்ட ஒழுங்கு கெடுமா? பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்குமா? என்று அரசு பார்க்கும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவரின் நடைபயணம் தோல்வியில் முடிந்து இருக்கிறது. மக்கள் ஆதரவு இல்லை. தன்னிடமே குற்றத்தை வைத்துக்கொண்டு அடுத்தவன் மீது குற்றத்தை பார்ப்பது தான் தி.மு.க.வின் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.