வேளாண் விளைபொருள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
ரூ.25 ஆயிரம் கோடி நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கி வேளாண் விளைபொருள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
ரூ.25 ஆயிரம் கோடி நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கி வேளாண் விளைபொருள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உழவர்களுக்கு துரோகம்
இந்தியா முழுவதும் உள்ள உழவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வேளாண் விளைபொருட்களுக்கு அதன் உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு காற்றில் பறக்கவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. உழவர்கள் நலனுக்கான வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
நிதி ஆயோக்கின் பரிந்துரையை ஏற்று கூடுதல் கொள்முதல் விலை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டால், அது உழவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாக அமையும். கூடுதல் கொள்முதல் விலை வழங்கினால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதோ, கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருக்கும் என்பதோ மத்திய அரசுக்கு தெரியாததல்ல. இவற்றையெல்லாம் அனுசரித்து கூடுதல் கொள்முதல் விலை வழங்க முடியும் என்பதை மத்திய அரசு உணர்ந்திருந்ததால் தான் இத்திட்டத்தை மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது. எனவே, இவற்றைக் காரணம் காட்டி வேளாண் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க முட்டுக்கட்டை போடும் எந்த பரிந்துரையையும் மத்திய அரசு ஏற்கக்கூடாது.
உயர்த்தி வழங்க நடவடிக்கை
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் விளைபொருட்கள் முறையாக கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பதால் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைந்த விலைக்கு தனியாரிடம் விளைபொருட்களை உழவர்கள் விற்க வேண்டியுள்ளது. இதனால் உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.14,474 கோடி இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசின் கூடுதல் கொள்முதல் விலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உழவர்களுக்கு இன்னும் கூடுதலான இழப்பு ஏற்படும். அத்தகைய நிலை ஏற்படுவதை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.
எனவே, வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு இம்மாத இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இத்திட்டத்திற்காக மத்திய அரசு செலவழிக்க உள்ள ரூ.25 ஆயிரம் கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கி கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.