கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்

கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-04-13 23:45 GMT
கடத்தூர், 

ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

வருகிற 21-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கப்படும்.

அதற்கு முன்னதாக வருகிற 2-ந் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படும். அதேபோல் அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் பள்ளிக்கூடங்கள் திறந்ததும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்