அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு மனித உரிமை ஆணையம் ‘சம்மன்’
மனவளர்ச்சி குன்றிய மகனுடன் சென்றவரை நடுவழியில் இறக்கி விட்டு சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு மனித உரிமை ஆணையம் ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
சென்னை,
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 3.1.2018 அன்று மன வளர்ச்சி குன்றிய எனது மகனுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மதுரைக்கு அரசு பஸ்சில் சென்றேன். அப்போது கண்டக்டர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். அதற்கு நான், மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அளித்த அரசு போக்குவரத்துக்கழக பயண சலுகை அட்டையை கண்டக்டரிடம் காண்பித்தேன்.
அதை கண்டக்டர் ஏற்க மறுத்தார். இதைத்தொடர்ந்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் கண்டக்டர், டிரைவர் இருவரும் சேர்ந்து என்னையும், எனது மகனையும் அவமரியாதையாக பேசி என்னிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 570 ரொக்கப்பணம் மற்றும் மருத்துவ சிகிச்சை, பயண சலுகை தொடர்பான அசல் ஆவணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.
கட்டாயப்படுத்தி இறக்கி விட்டனர்
இதன்பின்பு, பஸ் நிறுத்தம் எதுவும் இல்லாத கப்பலூர் பாலத்துக்கு கீழ் பகுதியில் கட்டாயப்படுத்தி இறக்கி விட்டு சென்றனர். இதன்காரணமாக எனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலுடன் வீடு திரும்பினேன்.
இதுகுறித்து விருதுநகர் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளருக்கு புகார் மனு அனுப்பினேன். துணை மேலாளர்(வணிகம்) விசாரணைக்கு ஆஜராகும்படி எனக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி, நான் விசாரணைக்கு ஆஜரானேன்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆனால், சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டர் ஆஜராகவில்லை. மாலை 4 மணியில் இருந்து இரவு 7.45 மணி வரை துணை மேலாளர் என்னை காக்க வைத்து விட்டு எந்தவித முறையான பதிலும் தெரிவிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார். எனவே, சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டர் மற்றும் முறையாக விசாரணை நடத்தாத துணை மேலாளர்(வணிகம்) ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்னிடம் இருந்து பறித்துக்கொண்ட ரூ.6 ஆயிரத்து 570 ரொக்கப்பணம் மற்றும் மருத்துவ சிகிச்சை, பயண சலுகை தொடர்பான ஆவணம் ஆகியவற்றை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
நேரில் ஆஜராக சம்மன்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கு சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர், விருதுநகர் அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர்(வணிகம்) ஆகியோர் 25-ந் தேதி நேரில் ஆஜராக ‘சம்மன்’ அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், அன்றைய தினம் நேரில் ஆஜராகாதபட்சத்தில் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்றும் உத்தரவில் நீதிபதி கூறி உள்ளார்.