அரை நிர்வாண போராட்டம் வேண்டாம்: அய்யாகண்ணுக்கு வக்கீல் அறிவுரை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

அரை நிர்வாண போராட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்று விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணுக்கு அறிவுரை வழங்கும்படி அவரது வக்கீலிடம், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா கருத்து தெரிவித்தார்.

Update: 2018-04-12 21:58 GMT
சென்னை,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு. இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, 90 நாட்கள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அனுமதிக்க முடியாது

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘மெரினா கடற்கரை என்பது பொதுமக்கள் வந்து செல்லும் பொது இடம். அங்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த 90 நாட்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது’ என்று கருத்து தெரிவித்தார்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘90 நாட்கள் என்பதை வேண்டுமென்றால் குறைத்துக்கொள்கிறோம்’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘எத்தனை நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போகிறார்? என்பதை அய்யாகண்ணுவிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமைக்கு) தள்ளிவைத்தார்.

அரை நிர்வாணம் வேண்டாம்

பின்னர் மனுதாரர் வக்கீலிடம் நீதிபதி டி.ராஜா, ‘டெல்லியில் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள் அரை நிர்வாணம் உள்ளிட்ட பலவிதமான போராட்டங்களை நடத்தினர். அரை நிர்வாணமாக போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அய்யாகண்ணு மற்றும் அவரது சங்க உறுப்பினர்களான விவசாயிகள் ஆகியோருக்கு அறிவுரை வழங்குங்கள்’ என்று கருத்து தெரிவித்தார். 

மேலும் செய்திகள்