போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த ரஜினிகாந்த்தின் கருத்துக்கு திருமாவளவன் எதிர்ப்பு
போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த ரஜினிகாந்த்தின் கருத்துக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். #RajiniKanth
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, மீதம் உள்ள போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது என்று எடுக்கப்பட்டுள்ள முடிவை வரவேற்கிறோம். இந்த முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தால் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக அமைந்திருக்கும்.
ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது போலீசார் ஏவிய வன்முறையை மூடி மறைத்துவிட்டு, போலீசாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அப்பாவி மக்கள் மீது ஒவ்வொரு நாளும் போலீசார் ஏவி வரும் வன்முறைகள் அவருக்கு தெரியாதா?
போராடுகிறவர்களை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்களை கொண்டுவரவேண்டும் என்ற விதத்தில் அவர் பேசியிருப்பது அவருக்குள் இருக்கும் சர்வாதிகார மனநிலையையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.