கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன் பங்களாக்களுக்கு மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைப்பு

நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது பங்களாக்கள் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.

Update: 2018-04-09 22:45 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ரங்கநாதன் உள்பட பலர் கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டியில், பங்களா கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஒப்புதல் அளிக்க மறுக்கிறது என்றும் ஆனால், உத்தண்டி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் முக்கிய நபர்கள் பலர் விதிகளை மீறியும், கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிராகவும் வீடுகளை கட்டியுள்ளனர்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், இதுகுறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் டி.மோகன் என்பவரை நியமித்தனர். அந்த வக்கீல் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 138 பங்களாக்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அந்த 138 பங்களாக்களில், நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது பங்களாக்களும் இடம் பெற்று இருந்தது.

மின் இணைப்பு

இதையடுத்து விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள பங்களாக்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி மற்றும் மார்ச் 5-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 138 பேர் சார்பில் வக்கீல்கள் ஆஜராகினர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நிறுத்தி வைப்பு

138 பங்களாக்களின் உரிமையாளர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகினார்கள். அவர்கள், அந்த பங்களாக்கள் விதிகளின்படி கட்டப்பட்டுள்ளதா? விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து புகைப்படத்துடன் கூடிய கூடுதல் மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே, இந்த வழக்கை வருகிற ஜூன் 21-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை, இந்த பங்களாக்களுக்கு மின் இணைப்பை துண்டிப்பது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை நிறுத்தி வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்