‘ராணுவ தளவாட பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்’ நிர்மலா சீதாராமன் பேச்சு

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு ராணுவ தளவாட பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். #NirmalaSitharaman

Update: 2018-04-08 23:22 GMT
சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கலை அரங்கில் ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் மத்தியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

பாதுகாப்புத்துறை சார்பில் முதல் முறையாக தமிழகத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்ற பிரதமரின் திட்டத்தில் இந்திய ராணுவத்துறையின் தளவாட பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ராணுவ தளவாட பொருட்களை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது படிப்படியாக குறைக்கப்படும். மேலும், அந்த பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கப்படும். நாட்டுக்கு விவசாயம் முக்கியம். ஆனால் விவசாயம் எதிர்பார்த்த அளவுக்கு ஒட்டுமொத்த வளர்ச்சியை தரவில்லை.

தமிழகத்தில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி செய்ய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஓசூர் ஆகிய இடங்களில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான சிறு-குறு தொழில்கள் பெருகும். அதனால் இந்த பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

இவ்வாறு நிர்மலா சீதா ராமன் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு ஐ.ஐ.டி. மாணவர்கள் வேலைக்கு சேர வளாக நேர்முகத்தேர்வு நடத்தப்படுமா?

பதில்:- வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறித்து மத்திய அமைச்சகம்தான் முடிவு செய்யும். ஐ.ஐ.டி. படிக்கும் பலர் படிப்பு முடித்த உடன் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள்.

கேள்வி:- வெளிநாட்டில் இருந்து பாதுகாப்புத்துறைக்கு தளவாட பொருட்கள் வாங்கிய பின்பு அந்த பொருட்களை பராமரிக்கவும், பழுது பார்க்கவும் வெளிநாடுகளை நாடுவதால் காலதாமதம் மற்றும் செலவை தவிர்க்க இந்தியாவில் தனி மையம் ஏற்படுத்தலாமே?

பதில்:- நல்ல யோசனை. இதை நான் பரிசீலிக்கிறேன்.

இவ்வாறு மாணவர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது அவருடன் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி உடன் இருந்தார். 

மேலும் செய்திகள்