தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவது உறுதி மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு ஹெலிகாப்டரில் சென்றாலும், காரில் சென்றாலும் கருப்புக்கொடி காட்டுவது உறுதி என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #CauveryIssue #MKStalin #PMModi

Update: 2018-04-08 06:18 GMT
சென்னை,

காவிரி உரிமை மீட்புக்கான 2 ஆம் நாள் பயணம் தஞ்சை சூரக்கோட்டையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 தி.மு.க. சார்பில் போராட்டங்கள்

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில்  தொடர் போராட்டங்கள்  நடத்தப்பட்டு  வருகின்றன.

தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கடந்த 5ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு  பயணத்தை நடத்த  தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காவிரி உரிமை மீட்பு பயணம்

காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை மீட்டெடுக்க காவிரி உரிமை மீட்பு பயணம் இரண்டு குழுக்களாக மேற்கொள்ள  இருக்கிறது. திருச்சி முக்கொம்பிலும், வருகிற 9-ந் தேதி அரியலூரிலும் இந்த பயணம் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக திருச்சி முக்கொம்புவில் இருந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணத்தினை நேற்று தொடங்கினார்.  அதற்கு முன் திரளாக கூடியிருந்த கூட்டத்தினரின் முன் அவர் பேசினார்.

அதில், இது அரசியலுக்காக நடைபெறும் பயணம் அல்ல.  தமிழக உரிமையை மீட்டெடுக்கவே இந்த நடைபயணம் என்று கூறினார்.  தொடர்ந்து தொடக்க நிகழ்ச்சியாக முக்கொம்பில் கொடியேற்றப்பட்டது. பின்னர் மு.க. ஸ்டாலின் மற்றும்  கூட்டணி கட்சி  தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள்,  பல்வேறு அமைப்பினர்  அங்கிருந்து நடைபயணமாக புறப்பட்டனர்.

2-வது நாளாக ஸ்டாலின் பயணம்

தொடர்ந்து இன்று 2வது நாளாக தஞ்சை சூரக்கோட்டையில் இருந்து மு.க. ஸ்டாலின் நடைபயணத்தினை தொடங்கியுள்ளார்.  இதில் திருநாவுக்கரசர், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

தஞ்சை சில்லத்தூரில் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆட்சி மாற்றத்திற்கு காத்திருக்கிறீர்கள்

பொது கூட்டத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வந்திருப்பது இந்த ஆட்சியை அகற்றுவதற்காக தான் என்பதை உணர்த்துகிறது. பெண்கள் 4 பேர் இருந்தால் சத்தம் இருக்கும், குழப்பம் இருக்கும்; இங்கு அதிகமான பெண்கள் அமர்ந்து இருந்தும் கட்டுப்பாட்டோடு இருப்பதை பார்க்கும்போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.

மத்திய அரசு எள்ளவும் முயற்சிக்கவில்லை

காவிரிக்காக அனைத்து அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்; இது வெற்றி போராட்டமாகியது.  காவிரி உரிமை மீட்புக்கான 2-ம் நாள் பயணம் தஞ்சை சூரக்கோட்டையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு எள்ளவும் முயற்சிக்கவில்லை. 

ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயார்

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான எங்களை சிறையில் வைக்க இடம் இல்லாததால் மாலையே விடுவித்தனர். காவிரிக்காக திமுக, தோழமை கட்சிகள் சார்பில் நடந்த முழு அடைப்பு போராட்டம் மிகப்பெரிய வெற்றி. காவிரி பிரச்சனைக்காக ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயார்.

பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவது உறுதி

திமுக தலைவர் கருணாநிதியை ஈன்றெடுத்தது இந்த மண். மண்ணின் மைந்தனாக பேசி வருகிறேன். தமிழகத்திற்கு வரும் பிரதமர் ஹெலிகாப்டரில் பயணித்தாலும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும். ஹெலிகாப்டரில் சென்றாலும், காரில் சென்றாலும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவது உறுதி. பிரதமர் வரும் போது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்