எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து
‘‘ஏசுபிரான் போதித்தவைகளை பின்பற்றி மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்’’ என்று, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,
‘‘ஏசுபிரான் போதித்தவைகளை பின்பற்றி மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்’’ என்று, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
அன்பே வடிவமான ஏசுபிரான் அவதரித்த நன்னாளை கிறிஸ்துமஸ் திருநாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்தவரும், உலக மக்களுக்கு அன்பின் புனிதத்தை உணர்த்தியவருமான ஏசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளில், கிறிஸ்தவ பெருமக்கள் தங்கள் வீடுகளில் வண்ண மின் விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து, வீட்டு வாசலில் மின் நட்சத்திரங்களை கட்டி, அதிகாலையில் குளித்து புதிய ஆடைகளை உடுத்தி தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு, ஆண்டவராகிய ஏசு கிறிஸ்துவை வழிபட்டு, உற்றார்–உறவினருடன் அறுசுவை விருந்துண்டு கோலாகலமாக கொண்டாடி மகிழ்வார்கள்.
கிறிஸ்தவ மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி அளிக்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி சீரிய முறையில் செயல்படுத்தினார்கள்.
ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, தொடர்ந்து இத்திட்டத்தினை செவ்வனே செயல்படுத்தியுள்ளதின் விளைவாக, இதுவரை 2 ஆயிரத்து 800 கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்து உள்ளனர்.
ஏசுபிரான் போதித்த தியாகம், மன்னிப்பு, அன்பு, சமாதானம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.