அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒரு மாதத்துக்குள் சேர்க்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒரு மாதத்துக்குள் சேர்க்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

Update: 2017-12-22 21:15 GMT
சென்னை,

தனியார் கல்லூரி மாணவர்களை, அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒரு மாதத்துக்குள் சேர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவ கல்லூரியை நிர்வகிப்பதில் நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சினை எழுந்ததால், தங்களை அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றக்கோரி 17 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தபோது, சிலர் வக்கீல் என்ற போர்வையில் கல்லூரி நிர்வாகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க நேரிடும். நிர்வாக குளறுபடி காரணமாக இந்த கல்லூரியில் 2017-18, 2018-19 ஆகிய கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ஒரு கல்லூரி சரியாக இயங்கவில்லை என்றால் அந்த கல்லூரிக்கு அனுமதியளித்த அரசு தான் அங்கு பயிலும் மாணவர்களின் கல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

அன்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 144 மாணவர்களையும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கவேண்டும். இதற்கு ஏதுவாக அரசு மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை உயர்த்த ஒரு மாதத்துக்குள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லவில்லை என்பதால் அவர்களின் வருகைப்பதிவேட்டை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.

மாணவர்களின் சான்றிதழ்களை அன்னை மருத்துவ கல்லூரி நிர்வாகம் உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும். வழக்கு விசாரணையை ஜனவரி 2-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று மாணவர்களின் நலன் கருதி காணொலி காட்சி மூலமாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்