எடப்பாடி பழனிசாமி சட்டையில் ஜெயலலிதா படத்தை மாற்றி மோடி படம் வைத்து வெளியிட்டவர் கைது

ஜெயலலிதா படத்தை மாற்றி, மோடி படம் வைத்து சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-22 19:00 GMT
கன்னியாகுமரி

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சட்டைப்பையில் வைத்திருந்த ஜெயலலிதா படத்தை மாற்றி, மோடி படம் வைத்து சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயல் பாதிப்புகளை பார்வையிட சமீபத்தில் பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வந்திருந்து, பிரதமரை வரவேற்றார். இது தொடர்பான படங்கள் ‘வாட்ஸ்–அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன.

பிரதமரை வரவேற்றபோது, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சட்டைப்பையில் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்திருந்தார். அந்த படத்தை வெளியில் இருந்து பார்த்தாலும் ஜெயலலிதா உருவம் தெரிந்தது. இந்த நிலையில் அந்த படத்தில் ஜெயலலிதா உருவத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பிரதமர் மோடியின் படத்தை இடம்பெறச்செய்து சமூக வலைத்தளங்களில் வி‌ஷமத்தனமாக வெளியிடப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச் செயலாளரான கனகராஜ் (வயது 45) கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி என்பவரை கைது செய்தனர். அலெக்ஸ்பாண்டி, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் என கூறப்படுகிறது.

அலெக்ஸ்பாண்டி கூறுகையில், அந்த படம் எனக்கு இன்னொரு நபரிடமிருந்து வாட்ஸ்–அப்பில் வந்தது. அதைத்தான் நான் மற்றவர்களுக்கு அனுப்பினேன் என்றார்.

மேலும் செய்திகள்