கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கடலோர மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2017-12-21 22:00 GMT
சென்னை,

கடலில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் வழக்கமாக டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடையும். கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

ஆனால் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. நேற்று அந்த பனிப்பொழிவு பல மாவட்டங்களில் நீங்கி, வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

கடலில் இருந்து வீசும் காற்றில் கடந்த சில நாட்களாக ஈரப்பதம் குறைவாக இருந்தது. அந்த ஈரப்பதம் திடீர் என உயர்ந்து உள்ளது. அவ்வாறு ஈரப்பதம் மிகுந்த காற்று கிழக்கு திசையில் இருந்து வீசுவதாலும், காற்றின் வேகமாற்றம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் 21-ந் தேதி வரை இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவில் 6 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது.

அந்தமான் அருகே வருகிற 25-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இது 2 நாட்களுக்கு பிறகு தான் தெரியும்.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

பாபநாசம்(நெல்லை மாவட்டம்) 3 செ.மீ., காரைக்கால் 2 செ.மீ., நாகப்பட்டினம் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்