ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவித வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவித வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Update: 2017-12-21 14:43 GMT

சென்னை,

காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம் என 59 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தொகுதியில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டார்கள். இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவித வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் 174 வாக்குச்சாவடிகளில் முழுமையாக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. 84 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க 5,000 பேர் வரையில்  காத்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது. 
 
இப்போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றது. 77.68 சதவித வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறிஉள்ளார். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்களை சீலிடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்