தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கி விரட்டியடிப்பு

ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

Update: 2017-12-14 06:04 GMT
ராமேசுவரம்,

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது ஒவ்வொரு  முறையும் இலங்கை கடற்படையினரால்  தாக்குதலுக்குள்ளாகி வருகிறார்கள்.

2 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி ஏற்படவில்லை. மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி 27 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 

இந்த நிலையில் மீண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த  1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே  மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 8-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

தொடர்ந்து தங்களது ரோந்து கப்பல்களை மீனவர்களின் படகுகள் மீது  மோதச்செய்தனர். இதில் படகுகள் சேதமானது. மேலும் படகுகளில் ஏறிய கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் சேதப்படுத்தினர். சில மீனவர்களையும் தாக்கினர்.

உடனே  இடத்தை காலி  செய்யாவிட்டால் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படையினர் மிரட்டியதையடுத்து வேறு  வழியில்லாமல்  ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டனர்.

மேலும் செய்திகள்