‘ஒகி’ புயலால் 433 பேர் மாயம்: 98 குமரி மீனவர்கள் கடலில் மூழ்கி பலி? பாதிரியார் அதிர்ச்சி தகவல்
‘ஒகி’ புயலால் 433 மீனவர்கள் மாயமாகி உள்ளனர் 98 குமரி மீனவர்கள் கடலில் மூழ்கி பலியானதாக பாதிரியார் ஒருவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி கடலுக்குள் சுழன்றடித்த சூறாவளி காற்று கரையோர கிராமங்களை பதம் பார்த்தது. மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து நாசமானது.இதுபோல கடலுக்கு சென்ற மீனவர்களின் படகுகளும் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமானது. அதில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் விழுந்து தத்தளித் தனர். இன்னும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களின் படகுகள் ஆளில்லா தீவுகளுக்கு அடித்துச் செல்லப்பட்டது.
இதுபற்றி மீனவ அமைப்பு கள், மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்தனர். கடலில் மாயமான மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.இதனை வலியுறுத்தி போராட்டங்களும் நடந்தது.
இதற்கிடையே கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி நடந்தது. கடற்படை, கடலோர காவல்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டை யில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மராட்டியம், குஜராத், கோவா மற்றும் லட்சத்தீவுகளில் கரை ஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர மாநில அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி, நேற்று முன்தினம் வரை மீனவர்கள் ஒவ்வொருவராக கரை திரும்பி வருகிறார்கள்.
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களில் 433 பேர் பற்றிய விவரம் இன்னும் கிடைக்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுபற்றி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறும்போது, குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களில் 462 பேர் பற்றிய தகவல் தெரியாமல் இருந்தது. நேற்று 29 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் கரை ஒதுங்கினர். இவர்களை தவிர்த்து இன்னும் 433 பேர் கரை திரும்பவேண்டும். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்றார்.
மாவட்ட நிர்வாகம் மாயமான மீனவர்கள் 433 பேர் என்று அறிவித்துள்ள நிலையில் குமரி மாவட்ட மீனவ அமைப்புகள் மற்றும் கடற்கரை கிராம மக்கள் வெளியிட்டுள்ள தகவலில் இன்னும் 530 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று கூறி உள்ளனர்.
இக்கிராமங்களில் இருந்து கடலுக்கு சென்றவர்களில் கரை திரும்பியவர்கள் கூறிய தகவலின் அடிப்படையிலும், மீனவர்களின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படை யிலும் இந்த எண்ணிக்கையை வெளியிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். மாயமான மீனவர்களில் 98 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அஞ்சுவதாகவும் மீனவ அமைப்பினர் கூறி உள்ளனர்.
குமரி மேற்கு மாவட்ட மீனவ கிராமங்களான நீரோடியில் 37 பேரும், மார்த்தாண்டம் துறையில் 6 பேரும், வள்ளவிளையில் 4 பேரும், இரவிபுத்தன் துறையில் 7 பேரும், சின்னத் துறையில் 22 பேரும், தூத்தூரில் 2 பேரும், குளச்சலில் 13 பேரும், பூத் துறை, இரயுமன்துறையில் தலா 2 பேரும், இணையம், ராமன்துறையில் தலா ஒருவரும் என மொத்தம் 98 மீனவர்கள் பலியாகி இருக்கலாம் என அவர்களுடன் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பியவர்கள் கூறி உள்ளனர்.
இந்த தகவலின்பேரில் நீரோடியில் 36 பேரின் புகைப்படங்களுடன் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இவர்களுக்காக அங்குள்ள ஆலயங்களில் இரங்கல் திருப்பலியும் நடத் தப்பட்டது. இதனால் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில் தெரிவித்தார். அவர், மேலும் கூறும் போது, உயர் அதிகாரிகள் 2 பேர் என்னை தொடர்பு கொண்டு கடலில் எங்காவது கரை ஒதுங்கி உள்ள மீனவர்கள் கடற்படை அதிகாரிகளை அல்லது அவர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உயிருடன் இருக்கும் தகவலை உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தி கடிதமோ அல்லது ஆடியோ உரையோ அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று நானும் ஆடியோ உரை ஒன்றை வெளியிட்டுள்ளேன்.
அந்த உரையில் கூறப்பட் டிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற எமது மீனவ மக்களே... மஞ்சப்பாறை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கும் உங்களின் கனிவான கவனத்திற்கு... குளச்சல் மற்றும் தூத்தூர் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படகுகள் புயலில் சேதமடைந்து விட்டன. 10 படகுகள் மூழ்கி விட்டதாக செய்தி வருகிறது. இதுவரையிலும் 98 மீனவர்கள் இறந்து விட்டதாக உடன் இருந்து மீண்டு வந்த மீனவர்கள் தெரிவித்தனர். இதில் 2 மீனவர்களின் சடலங்களே கிடைத்துள்ளது.
நமது மீனவர்கள் சிலரின் படகுகள் மாலத்தீவு மற்றும் ஆப்பிரிக்க கடல் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களின் வீடுகளில் மரண ஒலம், ஒப்பாரி நடக்கிறது. மாயமானமீனவர்களை மீட்கக்கோரி போராட்டமும் நடக்கிறது.
மஞ்சப்பாறை பகுதியில் தொழில் செய்யும் மீனவர்கள் எங்காவது கரை ஒதுங்கி அவர்கள் உயிருடன் இருக்கும் தகவலை உடனடியாக உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தயவு செய்து உடனடியாக போன் செய்து பேசுங்கள். நீங்கள் பேசினால் தான் உறவினர்கள் நம்புவார்கள்.
இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆடியோ உரை கப்பற்படை மூலம் ஆழ்கடல் பகுதியில் உள்ள மீன்பிடி படகுகளை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலுக்கு பிறகு மாயமான மீனவர்கள் சிலராவது கரை ஒதுங்கி உறவினர்களை தொடர்பு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.