ஆர்.கே.நகரில் எல்லா கட்சிகளும் பணப்பட்டுவாடா சீமான் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகரில் எல்லா கட்சிகளும் பணப்பட்டுவாடா செய்வதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2017-12-10 21:45 GMT
சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். காசிமேடு பவர் குப்பத்தில் தொடங்கி, வீதி, வீதியாக நடந்து சென்று மெழுகுவர்த்தி சின்னத்துக்கு அவர் ஆதரவு திரட்டினார். அவருடன் ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் அணிவகுத்து சென்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது. அதில், அந்த தொகுதியில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுக்காக யாரும் பணம் வாங்கக்கூடாது என்று கோஷம் எழுப்பியவாறு நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டனர்.

பிரசாரத்தின்போது சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் இந்த முறையும் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா நடக்கிறது. பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டி.டி.வி.தினகரன் அணியினர் மட்டுமே பணப்பட்டுவாடா செய்ததாக கூறியிருக்கிறார். ஆனால் எல்லா கட்சியினருமே பணப்பட்டுவாடா செய்கின்றனர்.

அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடாவை முழுவதுமாக கொடுத்து முடித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். தேர்தல் நடைமுறையையே மாற்றி அமைத்தால்தான் வாக்குப்பதிவு நியாயமாக நடக்கும். துணை ராணுவமும், பறக்கும் படை அதிகாரிகளும் சாலையில் நின்று மட்டும் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபடக்கூடாது.

வீதி, வீதியாக சென்று கண்காணிக்கவேண்டும். வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்யவும் தடை விதிக்கவேண்டும். ஒரு இடத்தில் மட்டுமே கூடி பிரசாரம் செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்